கெட்டுப்போன 100 டன் அரிசியை பட்டை தீட்டி விற்க முயற்சி : அதிகாரிகள் சோதனையில் திடுக்கிடும் தகவல்
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஒரு அரிசி ஆலையில் கடந்த 22-ந்தேதி நள்ளிரவு கேரள மாநில உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தமிழக போலீசாரின் உதவியுடன் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனை நடத்தினார்கள்.
திருச்சி மாவட்ட வழங்கல் அதிகாரிகளும் ஆலைக்கு வந்து அரிசி மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது கெட்டுப்போன அரிசி சுமார் 100 டன் அளவிற்கு பட்டை தீட்டப்பட்டு மூட்டைகளில் நிரப்பி வைத்து இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் வருவதை எப்படியோ முன்கூட்டியே தெரிந்து கொண்ட அரிசி ஆலை உரிமையாளர்களும், முக்கிய நிர்வாக பணியாளர்களும் தலைமறைவாகி விட்டனர்.
இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகளுடன் இரவோடு இரவாக ஆலைக்கு ‘சீல்’ வைத்து விட்டு அதிகாரிகள் வெளியேறினார்கள்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டவை என தெரியவந்தது. கேரளாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது அம்மாநில மக்களின் உணவு தேவைக்காக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இப்படி அனுப்பி வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள் கேரள நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் இயற்கையின் விளையாட்டுக்கு இந்த அரிசி மூட்டைகளும் தப்ப முடியவில்லை. ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகள் தண்ணீரில் நனைந்து கெட்டு போனதால் அவற்றை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதித்தது.
மனிதர்கள் சாப்பிட முடியாத அந்த அரிசியை மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இடத்தை காலி செய்தால் போதும் என கேரள அரசு முடிவு செய்து ஏலம் விட்டது. அதனை ஏலம் எடுத்தவர்கள் துறையூரில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு கொண்டு வந்து கெட்டுப்போன அரிசிக்கு பட்டை தீட்டி (பாலீஷ்) மீண்டும் விற்பனை செய்வதற்காக ரகசிய திட்டம் போட்டனர். சட்ட விரோதமான இந்த பணியில் தமிழக தொழிலாளர்களை ஈடுபடுத்தினால் விஷயம் வெளியில் கசிந்து விடும் என கருதிய ஆலை நிர்வாகத்தினர் வட மாநில தொழிலாளர்களின் உதவியுடன் இரவு பகலாக பட்டை தீட்டும் பணியில் தீவிரம் காட்டி அவற்றை மூட்டைகளில் நிரப்பிய விவரங்கள் திடுக்கிடும் தகவல்களாக அம்பலமாகி உள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணியிடம் கேட்டபோது ‘துறையூர் அரிசி ஆலை எந்தவிதமான விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றாமல் கெட்டுப்போன தரமற்ற அரிசிக்கு பட்டை தீட்டி மீண்டும் அதனை விற்பதற்கான முயற்சியில் இறங்கியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு நாற்றம் அடித்த அந்த அரிசியை பொதுவான அரவை எந்திரங்களில் பட்டை தீட்டியது பெருங்குற்றமாகும். ஆலை உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.