கொடைக்கானல் சாலைகளின் மோசமான நிலை..!
சுற்றுலா தளமான கொடைக்கானலில் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபற்றி நம்மிடம் பேசிய உள்ளூர்வாசி திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலா தலமான கொடைக்கானலில் வருடம் தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவது வழக்கம். அதேபோல் கொடைக்கானல் நகராட்சி மட்டுமல்லாமல் ஊராட்சி பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்காக தங்களது வாகனங்களில் வந்து சுற்றுலாத் தளங்களை பார்வையிட்டு செல்கின்றனர்.
அதேபோல் கொடைக்கானல் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவு விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். இப்பகுதியில் உருளை, கேரட், முள்ளங்கி, பீட்ரூட், பீன்ஸ் போன்ற பல்வேறு காய்கறிகளும் அதேபோல் பிளம்ஸ், பேரிக்காய் உட்பட பல்வேறு பழ வகைகளும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பொருட்களை தினமும் விவசாயிகள் லாரிகள், பிக்கப் ஜீப்புகள், மூலம் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகளும், பழங்களும் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் விவசாயிகள் அதிக அளவு செல்லும் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி, பழம்புத்தூர், பூம்பாறை, நாயுடுபுரம் பெரும்பள்ளம் போன்ற ஊராட்சி பகுதிகளிலும் எல்லா சாலைகளும் கொடைக்கானல் நகராட்சியில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயில் பின்புறம் உள்ள பில்டிங் சொசைட்டி சாலையும் நாயுடுபுரம் செல்லும் சாலையும் வில்பட்டி செல்லும் சாலை செட்டியார் பார்க் செல்லும் சாலை என அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனமும் மற்றும் உள்ளூர் வாசிகளின் வாகனமும் பழுதடைந்து பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கின்றனர்.கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து தற்போது அதிக அளவு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகின்றனர். இது போன்ற சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும் வாகனங்களில் பயணிக்க தகுதியற்ற சாலைகளாக உள்ளன.ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி கொடைக்கானல் கிராமப்புறம் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் சாலைகளை சரி செய்ய வேண்டும் தரமான சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என கொடைக்கானல் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் கொடைக்கானலில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை தரமான தார் சாலையாக அமைத்து கொடுக்குமா?
– A.முகமது ஆரிப்