சகாயம் விருப்ப ஓய்வு… : அரசியலுக்கான அறிவிப்பா..?
விருப்ப ஓய்வு அளிக்குமாறு கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி விண்ணபித்திருந்தார் ஐ.எ.ஏஸ். அதிகாரி சகாயம். ஜனவரி 2-ம் தேதி இவரது அவகாசம் முடிவடைந்த நிலையில் முறைப்படி அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். சகாயம் நடத்தி வரும் மக்கள் பாதை அமைப்பை அரசியலில் ஈடுபடுத்த திட்டம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த சகாயம், முதலில் தமிழக அரசின் சிறிய துறைகளில் பணியாற்றி, பின்னர் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் பணிக்கு தேர்வானவர். இவர் கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்தார்.
சகாயம் ஐஏஎஸ்-க்கு கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு முக்கிய பதவிகளை வழங்கவில்லை எனவும் இதனால் அவர் கடும் மனஉளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சகாயம் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி விருப்ப ஓய்வுக்கோரி விண்ணப்பித்திருந்தார். இவரது பணி காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன.
சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, கிரானைட் ஊழலை வெட்ட வெளிச்சமாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சகாயம் ஐஏஎஸ் என்றால், லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகம் தான் நினைவுக்கு வரும். அவரின் நேர்மையின்பால் ஈர்த்து இளைஞர்கள் பலர், அவருடைய வழிகாட்டலில் இயங்க இயக்கமாக செயல்பட்டு வருகிறார்கள். இடையில், சகாயம் ஐஏஎஸ் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.
அரசுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அளித்த பேட்டியில் “நான் வருத்தத்தில் உள்ளேன். நேர்மையாக செயல்பட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று ஒருமுறைகூட நேரில் அழைத்து பேசவில்லை. நான் அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளில் விருப்ப ஓய்வு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது ஒரு கோரிக்கையை தமிழக அரசிடம் வைத்தேன். ஜனவரி 31-ம் தேதி காந்தி மறைந்த தினத்தில் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். இந்த கோரிக்கையை கூட தமிழக அரசு நிராகரித்துள்ளது. அதற்கு முன்னதாகவே விடுவித்துள்ளது“ என்றார். இந்நிலையில் விருப்ப ஓய்வுக்கோரி விண்ணப்பித்த சகாயத்தின் அவகாசம் ஜனவரி 2-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் முறைப்படி அவர் அரசுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
திருவள்ளுவர் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தில் மக்கள் பாதை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எந்தவித நெருக்கடியும் இன்றி, தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலேயே விருப்ப ஓய்வு முடிவை எடுத்தேன். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் இருந்து ஏன் அரசியலை எதிர்பார்க்கிறீர்கள் எனும் கேள்வி எழுகிறது. ஏன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசியல்வாதியாக வேண்டும் எனும் கேள்வி வருகிறது. எனவே மக்கள் பாதை இளைஞர்கள் அத்தகைய முடிவை எடுப்பார்கள். அப்படி எடுக்கும்போது மக்கள் பாதை இளைஞர்கள் அந்த முடிவை அறிவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.
– நமது நிருபர்