அரசியல்

பத்திரிகை கருத்து சுதந்திரம், நீதி வென்றது!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ கோபாலை சிறையில் அடைக்க எழும்பூர் 13ம் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வாரம் இரு முறை வெளிவரும் செய்தி இதழான நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
நக்கீரன் இதழில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறித்து வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஏப்ரலில் வெளியான நக்கீரன் இதழில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்து அட்டைப்படக் கட்டுரை ஒன்று வெளியானது. அந்தக் கட்டுரையில், கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு செல்லத் தூண்டியதற்கான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா தேவி, ஆளுநரைச் சந்தித்ததாகக் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், புனேவுக்குச் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு கோபால் வந்தார்.
அப்போது அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கைதுசெய்வதாகத் தெரிவித்தனர். இதற்குப் பிறகு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு கோபால் கொண்டு செல்லப்பட்டார். கோபால் கைதுசெய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட வைகோ சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து, அவரைச் சந்திக்க வேண்டுமெனக் கூறினார். ஆனால், அதற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் காவல் நிலையம் முன்பாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து வைகோ கைதுசெய்யப்பட்டார்.
கோபால் கைதுசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
“பேராசிரியை விவகாரத்தில் “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார – பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாசிச பாஜக அரசும் -பொம்மை அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல்.
தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பா.ஜ.க அரசும், தமிழக ஆளுநரும் கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அடிமை அரசை பயன்படுத்துவது வெட்கக்கேடானது” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஒரு செய்திக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 பிரிவின்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருப்பது இதுவே முதல் முறை!
அது என்ன செக்‌ஷன் 124? இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுனர்களுக்கு அரசியல் சாசனம் விசேஷ உரிமைகளை வழங்கியிருக்கிறது. அவர்களது கடமைகளை செய்ய விடாமல் பணிகளை இடையூறு செய்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஓரிரு மாதங்களுக்கு முன்பு நாகையில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கருப்புக் கொடி காட்டிய திமுக.வினர், கொடிகளை ஆளுனர் கார் மீது வீசினர். அந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கணக்கான திமுக.வினரை போலீஸார் கைது செய்தனர். அப்போது ஆளுனர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘ஆளுனரை பணி செய்ய விடாமல் தடுப்பது, செக்‌ஷன் 124-ன் படி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உரிய குற்றம்’ என எச்சரிக்கையாக குறிப்பிட்டது. அதே செக்‌ஷனில்தான் இப்போது நக்கீரன் மீது நடவடிக்கை பாய்ந்தது.
நக்கீரன் கோபால் மீது மட்டுமல்ல, நக்கீரன் குடும்பத்தில் பொறுப்பாசிரியர் கோவி லெனின் மற்றும் துணை ஆசிரியர்கள், நிருபர்கள் என 35 பேர் மீது ஒரே எஃப்.ஐ.ஆரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நக்கீரன் கோபால் மருத்துவப் பரிசோதனை முடிக்கப்பட்ட பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி கோபிநாத் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நக்கீரன் கோபால் சார்பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜரானார்.
ஆளுநரின் பணியில் தலையிட்டதாக கூறி நக்கீரன் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. அதை சுட்டிக் காட்டிய வழக்கறிஞர் “அந்த புகாரில், ஆளுநரின் சார்பில் அளிக்கப்பட்டதற்கான தகவல் ஏதும் இல்லை, பத்திரிக்கை பிரதிகள் எதையும் அந்த புகாருடன் இணைக்கவில்லை. ஆளுநரின் பணியை நிறுத்த பலத்தினை பிரோயோகிக்கவே இல்லாத நிலையில் இந்த வழக்கு அர்த்தமற்றது என்று வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி கோபிநாத் சட்டப்பிரிவு 124ன் படி நக்கீரன் கோபாலை கைது செய்வதில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்று காவல் துறை தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் கோபிநாத்.
இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆளுனர் மாளிகையே கொடுத்த புகார் அடிப்படையில் நடந்த ஒரு கைது, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளியில் வந்த நக்கீரன் கோபால் தன்னை நேரில் வந்து சந்தித்து பேசிய முக. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு தன்னுடைய நன்றியினை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button