கோஷ்டி பூசலில் ஆட்டம் காணும் அதிமுக… பதுங்கிய திமுக..! தொண்டர்கள் ஆவேசம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை யூனியனில் 12 வார்டுகளில் 5 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது, மூன்றில் திமுகவும், நான்கில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக வெற்றிபெற்ற நான்கு கவுன்சிலர்களும் அதிமுகவின் உறுப்பினர்கள். அவர்கள் அதிமுக விருப்ப மனு பெறும்போது தங்களுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விருப்ப மனு அளித்தனர். இந்நிலையில் இவர்களின் பெயர் இல்லாமல் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. எனவே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்பதால் சுயேட்சையாக களம் கண்டார்கள்.
இவர்கள் நான்கு பேரும் அதிமுக கவுன்சிலர்கள் யாரும் சேர்மன் பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக அதிமுகவை ஆதரிக்காமல் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தலைவர் பதவியை தங்களுக்கும், துணைத் தலைவர் பதவியை திமுகவிற்கும் தருவதாக பேசியுள்ளனர். முதலில் ஏற்றுக் கொண்ட திமுகவினர் பின்னர் தலைவர் பதவி தங்களுக்குத்தான் வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் சுயேட்சைகள் இறங்கி வந்து தலைவர் பதவியை வைத்துக் கொள்ளுங்கள் துணைத் தலைவர் பதவி போதும் எனக் கூறியுள்ளனர். இதற்கும் திமுக தரப்பில் பிடி கொடுக்கவில்லை. மறைமுக தேர்தலின் போது திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். எனவே அதிமுக எளிதாக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவை சேர்ந்த சாந்தி சேர்மனாகவும், துணைத்தலைவராக மகேஸ்வரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். யூனியன் தலைவர் பதவியை திமுக எளிதில் கைப்பற்றும் என்று அதிமுகவினரே எதிர்பார்த்தனர். ஆனால் திமுக பதுங்கியதால் அதிமுக வெற்றி பெற்று விட்டது. இது திமுக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் இந்த சுயேச்சைகள் தனியாக போட்டியிட்டு வென்றார்கள் என்று நாம் விசாரித்த பொழுது ஈரோடு மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல்கள் வெடித்துள்ளது, அம்பலமாகியுள்ளது. உட்கட்சி பூசலும், உள்ளடி வேலைகளும் கொங்கு மண்டலத்தை ஆட்டம் காண வைத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களும் அதிமுக வசமே இருந்து வந்தது. இதற்கு காரணம் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற நம்பிக்கைதான். ஆனால் நாளுக்கு நாள் இந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது. கோஷ்டி மோதல்கள், உட்கட்சி பூசல்கள் தலைவிரித்து ஆட ஆரம்பித்து விட்டன. இதன் காரணமாக 4 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக அமோக வெற்றி பெற்று விட்டது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர்களாக செங்கோட்டையன், கருப்பணன் உள்ளனர். இவர்களைத் தவிர 6 அதிமுக எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். இவ்வளவு பேர் இருந்தும் ஏன் அமோக வெற்றிபெற முடியவில்லை என்றால் மாவட்ட அதிமுக கட்சி தொண்டர்கள் சொல்லும் காரணம் கட்சியை வெற்றிபெறச் செய்ய மாவட்ட அமைச்சர்களே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குறிப்பாக பெருந்துறை ஒன்றியத்தில் கட்சிக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக அமைச்சர் கருப்பணன் செயல்பட்டதாகவும் கூறுகின்றனர். எனவே அதிமுக மீது அதிருப்தியில் இருந்த 4 பேர் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். அவர்களில் ஒருவரான அதிமுக மாவட்ட முன்னாள் எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் ஜெயக்குமாரின் மனைவி சண்முகப்பிரியாவை பெருந்துறை யூனியன் சேர்மனாக்க முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை, முடிவில் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அனைத்தையும் முறியடித்து சாந்தி என்பவரை ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் அளிக்க தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலை நீடித்தால் வரும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அதிமுக மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வேதனைப்படுகின்றனர்.
- சென்னிமலை செந்தில்குமார்