பாக்கியராஜ் மனைவியை போனில் மிரட்டிய சங்க நிர்வாகி…
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அனைத்து தொழில்களும் முடங்கி கிடக்கிறது. முக்கியமாக சினிமாத்துறை மிகவும் மோசமான விளைவுகளைச் சந்தித்துள்ளது. இந்தத் தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் பொருளாதார நிலை மோசமான பின்னடைவுகளை சந்தித்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. சினிமாத் தொழிலாளர்கள் இந்தத் தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாதவர்கள். அன்றாட வாழ்க்கை நடத்தவே கஷ்டப்படும் இவர்கள் வீட்டு வாடகை, தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது போன்ற அடிப்படைத் தேவைகளையும், கடமைகளையும் எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
சினிமாத் தொழிலாளர்களின் கஷ்டங்களை உணர்ந்த தயாரிப்பாளர்களும், நடிகர்களும், தொழிலதிபர்களும், பொருட்களாகவும், பணமாகவும், சினிமா சங்கங்களின் சம்மேளனத்திடம் நன்கொடையாக வழங்கினார்கள். அவ்வாறு வழங்கப்பட்ட பொருட்களை சம்மேளனத்தில் இணைந்துள்ள சங்கங்களுக்கு பிரித்துக் கொடுத்தார்கள் சம்மேளன நிர்வாகிகள். இதுபோக அந்தந்த சங்கங்கள் மூலமும் சில உதவிகளை செய்தார்கள். நன்கொடையாக சங்கங்களுக்கு பிரித்துக் கொடுத்த பொருட்களை சங்க நிர்வாகிகள் தங்களது உறுப்பினர்களுக்கு முறையாக பிரித்துக் கொடுத்து தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் கொரோனா காலத்தில் பசியில்லாமல் வாழ்க்கை நடத்த வழிவகை செய்தார்கள்.
ஆனால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு வழங்கப்பட்ட பொருட்களை அதன் உறுப்பினர்களுக்கு வழங்கியதில் முறைகேடு செய்ததாக டி.கே.சண்முகசுந்தரம், சி.ரெங்கநாதன், ரமேஷ்கண்ணா போன்றோருக்கு அந்த சங்கத்தின் தலைவர் நடிகர் பாக்கியராஜ் தலைமையிலான நிர்வாகம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியதாக ஏற்கனவே கடந்த இதழில் எழுதியிருந்தோம்.
கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி இதனை விசாரிப்பதற்காகவே செயற்குழுவை கூட்டி இருக்கிறார் பாக்கியராஜ். இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அனுப்பப்பட்ட கடிதத்தில் கொரோனா காலகட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களை முறையாக வழங்காமல் மோசடி செய்த டி.கே.சண்முக சுந்தரம், சி.ரெங்கநாதன், நடிகர் ரமேஷ்கண்ணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக என்று அஜெண்டாவாக எழுதியிருக்கிறார் பாக்கியராஜ். விசாரணைக்கு வராதபட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
இதற்கிடையில் மோசடி புகாரில் சிக்கிய சி.ரெங்கநாதன், பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா பாக்கியராஜூக்கு போன் செய்து மிரட்டியிருக்கிறார். எங்கள் தலைவர் செல்வமணியை பகைத்து உனது கணவர் சினிமாவில் இருக்க முடியுமா? மரியாதையாக இருக்கச் சொல். என் விஷயத்தில் தலையிட்டால் நடப்பதே வேறு. என்று பேசிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டாராம். ரெங்கநாதனின் உளறலை பாக்கியராஜிடம் கூறியிருக்கிறார் அவரது மனைவி பூர்ணிமா.
செயற்குழு கூட்டத்திற்கு விசாரணைக்கு வராத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அழைப்பிதழ் கடிதத்தில் எழுதியிருந்ததால் இதை சமாளிக்க இந்த கும்பலின் தலைவன் செல்வமணி தலைமையில் சண்முகசுந்தரம், ரெங்கநாதன், ரமேஷ் கண்ணா ஆகிய நான்கு பேரும் கூடிப் பேசி ஒரு முடிவோடு கூட்டத்தில கலந்து கொண்டார்களாம். செயற்குழு ஆரம்பித்தவுடனேயே டி.கே.சண்முகசுந்தரம், ரமேஷ்கண்ணா, சி.ரெங்கநாதன் ஆகிய மூவரும் எழுத்தாளர்கள் சங்க நடவடிக்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி இவர்களை, சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செல்வமணி கொரோனா காலத்தில இவர்களின் பணியை பாராட்டி பேசியிருக்கிறார்.
செல்வமணியின் பேச்சிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் மற்ற உறுப்பினர்கள். அரசாங்கமே 55 வயதிற்கு மேல் யாரும் வெளியே வரவேண்டாம் என்ற போது 78 வயதான டி.கே.சண்முகசுந்தரத்தை யார் நிவாரணப் பொருட்களை வழங்க அழைத்தது. அவரால் அரிசி மூட்டையை தூக்க முடியுமா? இந்த பொருட்களை வழங்கியதாக எழுத்தாளர்கள் சங்கத்தில் 76 ஆயிரம் ரூபாய் கன்வைன்ஸ் எடுத்திருக்கிறார்கள். முறைகேடு செய்த பணத்தையும், பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது.
கடந்த ஒன்றரை வருடங்களாக எந்த செயற்குழுவிற்கும் வராத செல்வமணி சங்க விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கூட்டப்பட்ட செயற்குழுவிற்கு வந்து செல்வமணி கலந்து கொண்டதோடு அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம். இவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் என்று பேசி இருக்கிறார். தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் இவர்கள் முறைகேடு செய்த பணத்திற்கு என்ன வழி என்ற கேள்விக்கு செல்வமணியிடம் இருந்து எந்த பதிலும் இல்லையாம்.
பாக்கியராஜ் மனைவி பூர்ணிமா பாக்கியராஜிடம் போனில் மிரட்டியதற்கு ரெங்கனாதன் எட்டு மணிக்கு மேல் பேசிய பேச்சுகளை பொருட்படுத்த வேண்டாம். அவர் மதுபோதையில் பேசி இருப்பார். நானே இரவு நேரத்தில் ரெங்கனாதன் போன் பண்ணினால் எடுக்க மாட்டேன் என்று செல்வமணி ரெங்கநாதனுக்கு ஆதரவாக பேசி சமாளித்திருக்கிறார்.
மத்திய மாநில அரசுகளே ஐம்பத்தி ஐந்து வயதிற்கு மேல் உள்ளவர்கள் கொரோனா காலங்களில் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுத்தும் டி.கே.சண்முகசுந்தரம் எழுபத்து எட்டு வயதிலும் வெளியே வந்து பொருட்கள் வழங்கியதில் முறைகேடு செய்ததோடு கன்வைன்ஸ் ஒரு நாளைக்கு எழுநூறு ரூபாய் சங்கத்தில் வாங்கியிருக்கிறார். 78 வயதாகும் சண்முக சுந்தரத்தின் உயிருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் சங்கம்தானே பதில் சொல்ல வேண்டும். இதற்கு செல்வமணி எந்தப் பதிலும் சொல்லாமல் இவர்களை காப்பாற்றும் செயலை மட்டுமே செய்திருக்கிறார் சண்முகசுந்தரம், ரமேஷ்கண்ணா, ரெங்கநாதன் மூன்று பேரும் கன்வென்ஸ் மட்டும் 1 நாளைக்கு எழுநூறு ரூபாய் வீதம் இந்த கொரோனாவை பயன்படுத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் பணம் 76,000 /- ரூபாயை எடுத்ததோடு மட்டுமல்லாது உறுப்பினர்களுக்கு வழங்கிய பொருட்களிலும் முறைகேடு செய்திருக்கிறார்கள்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பாக்கியராஜ் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் ஒப்புதல் அளிக்கும்போது செல்வமணி மட்டும் இவர்களை காப்பாற்ற முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தலைவரால் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களை செல்வமணி காப்பாற்றிவிட்டார். ஆனால் இவர்களால் முறைகேடு செய்யப்பட்ட சங்கத்தின் பணம் திரும்பி வருமா? அல்லது உறுப்பினர்களின் பணத்தை தவறான முறையில் கையாண்டதற்காக செயலாளராக இருக்கும் மனோஜ் குமார் இதற்கு என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி பெரும்பலான உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையெல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த பாக்கியராஜ், செல்வமணி , சண்முக சுந்தரம், ரெங்கநாதன், ரமேஷ்கண்ணா ஆகியோரைப் பார்த்து நான்கு பேரும் பிளான் பண்ணித்தான் வந்திருக்கிறீர்கள். உங்கள் பிளான் ஜெயித்து விட்டது என்று இவர்களை பார்த்து நக்கலாக சிரித்திருக்கிறார்.
இதுகுறித்து எழுத்தாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கூறுகையில், “தலைவர் பாக்கியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் முறைகேடு செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இருந்த நிலையில் செல்வமணி காப்பாற்றி இருக்கிறார். இவர்கள் மூன்று பேருமே வேலை செய்து உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். இருக்கிற எல்லா சங்கங்களிலும் செல்வமணி தயவில் பதவிக்கு வரவேண்டியது. பிறகு கன்வைன்ஸ் வாங்கி பிழைப்பு நடத்துவது. இது இவர்களின் வாடிக்கை. உறுப்பினர்களின் பணம் அநியாயமாக செலவாவதற்கு செல்வமணி உடந்தையாகி இவர்களை காப்பாற்றி வருகிறார். இருந்தாலும் இந்த கூட்டத்திற்குள் நடிகர் பாக்கியராஜ் உள்ளே புகுந்து களையெடுத்து வருவது பாராட்டுக்குரியது” என்கிறார்கள்.
- சூரியன்