74 வது சுதந்திர தினம்
நாட்டின் 74 வது விடுதலை நாள் கொண்டாடப்பட்டது. பிரிட்டன் காலனியாதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த இந்தியா, தனது பண்பாட்டையும் கலாசாரத்தையும் மக்களின் செல்வங்களையும் இழந்து கொண்டிருந்த காலம். அடக்குமுறைகளுக்கு எதிராக 1857ம் ஆண்டில் வெடித்த சிப்பாய் கலகம், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டது.
அந்நியப் பொருட்களை தீயிட்டுக் கொளுத்தியும், சுதேசிப் பொருட்களை வாங்குவதை ஊக்கப்படுத்தவும் ராட்டை சுற்றிய மகாத்மா காந்தி, கிராமங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும் என அடிமட்டத்தில் இருந்து விடுதலைக்கான உணர்வுகளைத் தூண்டினார்.
நேதாஜி, பகத்சிங், கோகலே, திலகர், நேரு, பட்டேல் போன்றவர்கள் மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். சுதந்திரம் பெறுவதை கனவாகவே கண்ட பாரதி, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று முன்கூட்டியே பள்ளுப் பாடினான்.
நாட்டு மக்களின் தியாகங்கள், தீரங்கள், போராட்ட உணர்வுகளால் எந்த வன்முறை பலத்தையும் பிரயோகிக்காமல் அகிம்சை வழியில் ஆகஸ்ட் 14ம் நாள் நள்ளிரவில் நாம் சுதந்திரத்தை அடைந்தோம்.
சுதந்திரத்திற்காக போராடிய காலங்கள் ரத்தமும் கண்ணீரும் தியாகமும் நிரம்பியவை. குடும்பத்தினரையும் மறந்து சுயநலத்தை ஒதுக்கி பாடுபட்டவர்களால் கிடைத்த சுதந்திரம் இது…
எல்லையில் சவால் விடுத்தவர்களுக்கு இந்திய வீரர்கள் உரிய பாடம் புகட்டியிருப்பதாக, சுதந்திர தின விழா உரையில் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். மேட் இன் இந்தியா கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என குறிப்பிட்ட மோடி, அதிவேக பிராட்பேண்ட் சேவை பெறும் வகையில், ஆயிரம் நாட்களில் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் ஃபைபர் ஆப்டிக் நெட்ஒர்க்கில் இணைக்கப்படும் என்றார். அனைவருக்கும் தனி மருத்துவ அடையாள அட்டை வழங்கும் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தையும் பிரதமர் அறிவித்தார்.
இந்தியாவில் விஞ்ஞானிகள் 3 கொரோனா தடுப்பூசிகளை ஆய்வு செய்து வருவதாகவும், அந்த ஆய்வுகள் வெவ்வேறு நிலையில் இருப்பதாகவும் மோடி கூறினார். தடுப்பூசி தயாரானவுடன் அதை அனைவருக்கும் குறுகிய காலத்தில் கொண்டுசேர்க்க திட்டம் தயாராக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சுகாதார முறைகளை புரட்சிகரமாக மாற்றும், தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் என்ற புதிய திட்டத்தையும் அவர் அறிவித்தார். இதன்படி, ஹெல்த் ஐடி என்ற பெயரில், ஒவ்வொருவருக்கும் மருத்துவ அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், அதில் நோய் பாதிப்பு, எடுத்துக் கொண்ட மருந்துகள், எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறப்பட்டது என்பன உள்ளிட்ட மருத்துவ விவரங்கள் அனைத்தும் இடம்பெறும் என்றார்.
கடலாலும் நிலத்தாலும் இணைக்கப் பட்டுள்ள அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதேசமயம், கட்டுப்பாட்டு எல்லைக் கோடாக இருந்தாலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடாக இருந்தாலும், இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் எதிரிகளுக்கு, அவர்களுக்கு புரியும் மொழியிலேயே உரிய பதிலடி கொடுக்கப்பட்டிருப்பதாக மோடி கூறினார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் நமது நாட்டின் அடையாளங்களாகத் திகழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கொரோனா சூழலில் களப்பணியாற்றி வரும் அரசுத் துறை ஊழியர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்ததைக் குறிப்பிட்டார்.
கடந்த நான்காண்டுகளில் ஆயிரத்து 433 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறாயிரத்து 278 நீர்நிலைகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த மூன்றாண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஆறுகள், ஓடைகளில் தடுப்பணை கட்டும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
கேரள மாநிலத்துடன் பேச்சு நடத்திப் பரம்பிக்குளம் – ஆழியாறு, பாண்டியாறு – புன்னம்புழா திட்டங்களில் நிலவி வந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படும் நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசியத் தர நிர்ணயக் கட்டமைப்பின் உயர்கல்வித் தரவரிசைப் பட்டியலில் முதல் நூறு பல்கலைக்கழகங்களில் தமிழகத்தின் 18 பல்கலைக்கழகங்களும், முதல் நூறு பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தின் 18 கல்லூரிகளும், முதல் நூறு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழகத்தின் 32 கல்லூரிகளும் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியமும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஊதியம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.
–உதுமான்அலி