போலி பாஸ் தயாரித்தவருக்கு துணைபோகிறதா ? உளவுத்துறை
மாவட்ட கலெக்டர் கையெழுத்தை போலியாக போட்டு வாகனத்திற்கு பாஸ் வழங்கியவரை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் பார்த்திபனூர் காவல் துறையினர். இச்சம்பவம் இராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா, ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. தேவையில்லாமல் வெளியில் சுற்றும் வாகனங்களை பறிமுதல் செய்ய காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரச தேவைகளுக்காக கூட வெளியில் செல்ல முடியவில்லை என பொதுமக்கள் கூறிவரும் நிலையில், அரசு பொதுமக்களின் நிலமையை கருத்தில் கொண்டு அவசர, அத்தியாவசிய தேவைகளான மருத்துவம், துக்க நிகழ்வுகளுக்கு வெளியூர்களுக்கு செல்ல கட்டுபாடுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வெளிமாவட்டங்கள் செல்வோர் தாங்கள் செல்லும் காரணத்தை கூறி வாகன அனுமதிசீட்டு பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.
வெளியூர் செல்ல பாஸ் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் திருவிழாக்கூட்டம் போல் குவிந்து வருகிறார்கள். இந்த கூட்டத்தில் முண்டியடித்து பாஸ் வாங்க முடியாதவர்களை போலி ஏஜென்ட்கள் போலி பாஸ்களை சில ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அப்படியொரு சம்பவம் தான் இராமநாதபுரத்தில் அரங்கேறியிருக்கிறது.
போலி பாஸ் பிடிபட்டது எப்படி? என வருவாய்துறை அதிகாரி கூறும்போது…
“இராமநாதபுரம் மாவட்டம். கீழக்கரையை சேர்ந்த ‘நைய்னா முகம்மது’ என்பவர் கீழக்கரையில் கடை நடத்தி வரும் ஒருவரிடம் சென்னை செல்ல வாகன அனுமதி அட்டை வாங்கி தரவேண்டும் என கூற அவரோ, சென்னை சென்று வர ஒரு அனுமதி அட்டைக்கு 4500 வீதம் 20க்கும் மேற்பட்ட கார்களுக்கு போலியாக வாகன அனுமதி சீட்டு தயாரித்து ஆட்சியரின் போலி கையெழுத்துடன் வழங்கியுள்ளார். வாங்கிய அப்பாவி பொதுமக்கள் உண்மையென நம்பி சென்னை சென்று திரும்பி வரும் போது மாவட்ட எல்லையான பார்த்திபனூர் செக்போஸ்ட் அருகே சுகாதாரதுறையினரின் சோதனையின் போது TN.65 AB 1353 – TAVERA இந்த வாகனத்தை சோதனை செய்த போது அனுமதிசீட்டு போலியானது என சுகாதாரத்துறைக்கு தெரியவர மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவுக்கு தகவலை தெரிவித்தனர். அந்த வாகனத்தில் வந்தவர்களை பார்த்திபனூரில் உள்ள கிரசன்ட் தனியார் பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் கோபமான மாவட்ட ஆட்சியர் உடனடியாக அந்த வாகனத்தை பறிமுதல் செய்யவும், போலி பாஸ் தயாரித்தவர்கள் யாரென கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தீவிரமாக விசாரணை செய்த போது இதை கீழக்கரையை சேர்ந்த ஒருவர் ஏராளமான போலிபாஸ் தயாரித்துள்ளார் என்பதும், அவருடன் ஒருசில உளவுபிரிவு காவல்துறையினரும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருசில அதிகாரியும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பார்த்திபனூர் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் வெளி மாவட்டத்திற்க்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உளவு பிரிவு போலீஸ் அதிகாரிகள் போலிபாஸ் வழங்க உதவினார்களா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நபரையும் அவருக்கு உதவியவர்களையும் விரைவில் கைது செய்ய இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் போலிகள் களையெடுக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.
– நூருல் அமீன்.