23 ஆண்டுகளாக ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் மெர்சி பவுண்டேசன்
திண்டுக்கல் மாவட்டத்தில் மெர்சி பவுண்டேசன் மூலம் இருபத்தி மூன்று ஆண்டுகளாக ஏழை, எளியோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் திருமதி மெர்சி செந்தில்குமார். கிராமப்புறங்களில் இளமைத் திருமணங்களை தடுக்கும் வகையில் பெண் குழந்தைகள் அனைவரும் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வசதியில்லாத எண்ணற்ற பெண் குழந்தைகளின் படிப்புக்கு உதவி வருகிறார். அறியாத வயதில் தீய எண்ணத்தில் பிறர் தொடுவதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட நல்ல தொடுதல், தீய தொடுதல் என்பதை குழந்தைகள் உணர்வதற்காக தொடுதல் பயிற்சியும் மெர்சி பவுண்டேசன் மூலம் வழங்கி வருகிறார்.
மெர்சி பவுண்டேசன் செயல்பாடுகள் குறித்து திண்டுக்கல் பகுதிவாழ் மக்கள் நம்மிடம் கூறுகையில்,
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த சமயத்தில் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது தொகுதி மட்டுமல்லாது திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அதோடு மக்களுக்குத் தேவையான பலசரக்கு சாமான்கள், காய்கறி, அரிசி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி வந்தார்.
சமூக சேவை ஆற்றுவதில் தனது கணவரைப் போலவே மெர்சி செந்தில்குமாரும் தனது மெர்சி பவுண்டேசன் மூலம் நத்தம் நகரத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள், ஆதரவற்றோர், ஏழைகள் என கஷ்டப்பட்ட மக்களுக்கு தினசரி உணவு, கபசுர குடிநீர் வழங்கினார். பசியால் வாடிய விளிம்பு நிலை மக்களுக்கு அன்றாட அவர்களுக்குத் தேவையான உணவுகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கவும் ஏற்பாடு செய்தார்.
ஊரடங்கு சமயத்தில் தொழில்கள் அனைத்தும் முடங்கியிருந்ததால் திருநங்கைகளும் வருமானமின்றி கஷ்டப்பட்ட திருநங்கை லீலாவதிக்கும், திருநங்கைகளின் தாய்க்கூடு அமைப்பிற்கும் அரிசி மூட்டைகளை அனுப்பி வைத்திருக்கிறார் மெர்சி செந்தில்குமார். மாவட்டம் முழுவதும் நோயாளிகளுக்கும் உணவுகளை வழங்கி பசியைப் போக்கினார். நத்தம் நகரை பசியில்லா நத்தம் என மாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் ஏழைகள், ஆதரவற்ற முதியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உணவளித்து மக்களின் பசியை போக்கினார்.
மெர்சி பவுண்டேசனின் நிறுவனர் திருமதி மெர்சி செந்தில்குமார் நம்மிடம் கூறுகையில்,.
திண்டுக்கல் மாவட்டத்தில் 22 ஆண்டுகளைக் கடந்து 23வது ஆண்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் மெர்சி பவுண்டேசன் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறோம். பெண் குழந்தைகளை இளமையிலேயே வறுமையின் காரணமாக பெற்றோர்கள் அவர்களை வேலைக்கு அனுப்புகிறார்கள். படிக்க வேண்டிய வயதில் அவர்களை வேலைக்கு அனுப்புவதால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். ஆகையால் அவர்களை படிக்க வைப்பதற்கு சில நன்கொடையாளர்களின் துணையோடு பெண்கள் படிப்பதற்கு உதவி வருகிறோம்.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெண் குழந்தைகள் ஒரு குரூப் மேல்நிலைப்படிப்பை முடித்து சிலர் திருமணம் முடித்துள்ளனர். இரண்டுபேர் மருத்துவர்களாகவும், மூன்று பேர் பொறியாளராகவும் இருக்கிறார்கள். நல்ல கல்வி அமைப்பும், சுய பாதுகாப்பும், வேலைவாய்ப்பும் ஏற்பட மெர்சி பவுண்டேசன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நிறைய நல்ல உள்ளம் படைத்தவர்கள் எங்களுக்கு துணையாக இருக்கிறார்கள். கடந்த 24 ஆண்டுகளாக எங்களுடன் துணைநின்று பணியாற்றி வரும் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மகிழ்ச்சியுடன் பேசினார்.
பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் அதாவது மாமனார் தற்போதைய தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சராகவும், கணவர் செந்தில்குமார் பழனி சட்டமன்ற உறுப்பினராகவும் பம்பரமாக சுழன்று மக்கள் பணி ஆற்றிவரும் நிலையில் இவரும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். தொடரட்டும் இவரது மக்கள் பணி. நமது குழுவினர் சார்பாகவும் மெர்சி செந்தில்குமாரின் சேவை தொடர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
– சூரிகா