சினிமா

பாதுகாப்பானதா படப்பிடிப்புத்தளம்? : பிகில், இந்தியன் 2 தொடர்ந்து விபத்து…

சென்னை பூந்தமல்லி இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் செட் அமைக்கும் பணியின்போது, கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையிலுள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. இந்தியன் 2 படத்திற்கான செட் வேலையில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ப்ரொடக்ஷனில் பணியாற்றிய சந்திரன், இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் மது, உதவி இயக்குனர் கிருஷ்ணா என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.. 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நசரத் பேட்டை போலீசார், கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜாக்கிரதையால் மரணம் விளைவித்தல், அஜாக்கிரதையாக இயந்திரங்களை கையாளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக சினிமா படப்பிடிப்புகளில் செட் அமைக்கப்படும் போது அங்கு ஒளிக்காக தளத்தில் பிரமாண்ட லைட்கள் அமைக்கப்படும். இந்த லைட்களை தூக்கிப்பிடிக்க industrial crane என்ற கிரேன் உபயோகப்படுத்தப்படும்.

விபத்தின் போது, கிரேனை இயக்கியவர் அனுபவம் இல்லாத, புதியவர் என்று தெரிய வந்துள்ளது. அவர் கிரேனை நகர்த்தும் போது ஒரு பக்கம் எடை கூடி கிரேன், சமநிலை தவறி ஒரு பக்கமாக சாய்ந்து ஒட்டு மொத்தமாக கீழே இருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. டன் கணக்கில் எடை கொண்ட கிரேன் விழுந்ததில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், விபத்தின்போது சம்பவ இடத்தில் இருந்த படத்தின் நாயகன் கமல் ஹாசன், இயக்குநர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட 20 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஈவிபியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் 100 அடி உயர இயந்திரம் பயன்படுத்தப்பட்டதில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது. ஃபெப்சி அமைப்பில் அங்கமாக உள்ள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள், அதிகபட்சமாக 60 அடி உயர இயந்திரத்தில் மட்டுமே பணியாற்ற பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக இவ்வளவு உயரமான இயந்திரத்தை பயன்படுத்தும்போது, அதைத் தாங்கும் அளவிற்கு தரைத்தளம் உறுதியானதாக இருக்க வேண்டும். ஆனால், ஈவிபியில் தரைத்தளம் அதற்கேற்ப உறுதியாக அமைக்கப்படவில்லை என்று ஃபெப்சி அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.பாலிவுட்டில் தயாரிக்கப்படும் படங்களில் அதிகபட்சமாக 35 அடி உயர கிரேன் மட்டுமே பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. பாலிவுட்டில் தயாரிக்கப்படும் அனைத்துப் படங்களும் காப்பீடு செய்யப்படுகின்றன. இதனால், விபத்து ஏற்படும்பட்சத்தில், பாதிக்கப்படுபவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் நிவாரணத் தொகை வழங்குகின்றன. ஆனால், தமிழ்த் திரையுலகில் சில படங்களுக்கு மட்டுமே காப்பீடு எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஈவிபியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு, தீயணைப்புத் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
ஒருவேளை தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டிருந்தால், தீயணைப்புத்துறை வீரர்கள், பாதுகாப்பு அம்சங்களை மேற்பார்வையிட்டு அதில் குறைபாடு இருந்திருந்தால் அதைச் சுட்டிக்காட்டியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முன்பெல்லாம் தயாரிப்பாளர்களே ஸ்டுடியோ வைத்திருந்தனர். அதனால் அவர்களே பொறுப்பு எடுத்துக்கொள்வார்கள். ஆனால், இது போன்ற ஸ்டூடியோக்களில் எந்த பாதுகாப்பும் இல்லை என்றும் ஈவிபியில் இறந்த சடலங்களை எடுத்து செல்லக்கூட வாகனங்கள் இல்லை என்றும் கூறினார். இனி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஃபெப்சி உடன் ஒப்பந்தம் மேற்கொண்டால் மட்டுமே படப்பிடிப்பு என முடிவெடுத்துள்ளதாகவும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

இந்நிலையில், விபத்து நடந்தது கிரேன் என்ற பாரந்தூக்கி என்று பரவலாகக் கூறப்பட்டது. ஆனால், அது கிரேன் அல்ல பூம்லிப்ட் எனப்படும் ஒரு வகை நகரும் இயந்திரம் என்று அதன் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த Boom-lift என்பது உயரமான கட்டடங்களுக்கு வெளிப்புறம் இருந்தவாறு சிலவேலைகளைச் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இதன் கூடையில் 500 கிலோவுக்கு மேல் பாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதனுடைய இயக்கம் கூடையிலே இருக்கும்.

அதாவது இரண்டு ஆள் கொஞ்சம் வேலைக்கு வேண்டிய பொருள்கள் தவிர மேலே அதிகமாக பாரம் ஏற்றக்கூடாது. மேலே உள்ள ஆள் முழு உடல்பாதுகாப்புடன் பாதுகாப்புப் பட்டையை அணிந்து நங்கூரமிட்டிருக்க வேண்டும்.

தலைக்கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும். செல்ல வேண்டிய உயரத்திற்குச் சென்றதும் வண்டியின் இயக்கத்தை நிறுத்தி Safe mode-இல் பூம்லிஃப்டை இயங்க வைக்க வேண்டும். குறிப்பாக சரியான அளவில் வண்டியை நிறுத்தி சமதளத்தில் parking செய்த பிறகே உயரத்திற்குச் செல்ல வேண்டும்.
இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில், ஒரு பெரிய விளக்குத் தொகுதியை அந்த கூடையில் பொருத்தியதால், கூடையின் தாங்கும் திறனை விட விளக்குத் தொகுதியின் எடை அதிகம். இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஈவிபி பிலிம் சிட்டியில் தொடர் விபத்துகள் நடைபெறுவதால், அது ஃபிலிம் சிட்டி இயங்குவதற்கு சரியான இடம்தானா? அந்த இடத்தில் முறையாக அனுமதி பெற்றுத்தான் ஈவிபி நிர்வாகம் பிலிம் சிட்டி அமைத்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்திருக்கிறது.

விபத்து நடந்த ஈ.வி.பி படப்பிடிப்பு தளத்தில் சமீப காலத்தில் நடக்கும் இரண்டாவது விபத்து ஆகும். பிகில் படத்தின் படப்பிடிப்பிலும் இதேபோல உயர்த்தில் இருந்து அதிக எடை உள்ள விளக்கு விழுந்து செல்வராஜ் எனும் லைட்மேன் உயிரிழந்தார். இதனால் அங்கு மண் பலமாக இல்லையோ என சந்தேகமும் எழுகிறது.

இதே இடம் பொழுது போக்கு பூங்காவாக இருந்த போதும் பெரிய சைஸ் ராட்டினம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. அங்கு கட்டப்பட்ட ஒரு கட்டிடம் விரிசல் விழுந்து ஒரு பக்கம் சாய்ந்தே பல ஆண்டுகள் காட்சி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனால், ஆயிரக்கணக்கானோர் புழங்கக்கூடிய இந்த படப்பிடிப்புத்தளம் பாதுகாப்பானதா என்ற கேள்வி திரைத்துறையினரிடையே எழுந்துள்ளது.

விபத்து குறித்து கமல், சங்கர்

இதுகுறித்து லைகா நிறுவனத்துக்கு கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில் , “படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். விபத்து ஏற்பட்டால் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு முழுமையாக, உடனடியாக தரப்பட வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் முதல்முறையாக விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “மிகுந்த துயரத்துடன் ட்வீட் செய்கிறேன். துயர சம்பவம் நடந்ததில் இருந்து மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறேன். எனது உதவி இயக்குநர் மற்றும் குழுவினரின் இழப்பால் எனது தூக்கத்தை இழந்துவிட்டேன். நூலிழையில் நான் தப்பித்தாலும் அந்தக் கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர்களது குடும்பத்துக்கு நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் அமீர் கூறும்போது ‘சங்கர் படம் என்பதால் மூன்று பேரின் உயிர் இழப்பு பெரிதாகப் பேசப்படுகிறது. இதுபோன்று தமிழ்சினிமாவில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. திரைப்படத் தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. கோடி கோடியாய் கொட்டி பணம் எடுக்கும் இந்த தொழிலில் உரிய பாதுகாப்பு விஷயங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை. ஈ.வி.பி படப்பிடிப்பு தளத்தில் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் கிடையாது.

பொருத்தமில்லாத கிரேன் பயன்படுத்தியதே 3 பேரின் உயிரிழப்புக்கு காரணம். சினிமாவுக்கு சம்பந்தமில்லாத ஹைட்ராலிக் கிரேன் இதில் பயன்படுத்தப்படுகிறது. மேலே உயர்த்தியபடி இருந்த நிலையில் கிரேனை அங்கிருந்து நகர்த்தியதால் தான் விபத்து நிகழ்ந்திருக்கிறது. கீழே இறக்கிய பின்னர் தான் நகர்த்த வேண்டும். ஆனால் கிரேன் ஆபரேட்டரிடம் அப்படியே நகர்த்துமாறு உத்தரவு வந்திருக்கலாம். அந்த அடிப்படையில் அவர் நகர்த்தியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் படப்பிடிப்பை நடத்த வேண்டும் முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் மூன்று பேரின் உயிரை பலி வாங்கி இருக்கிறது.” என்றார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button