நடிகர் விஜய் ஜூலை-6 ஆம் தேதி நிர்வாகிகளிடம் ஆலோசனை
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவருக்கு தற்போது 80 வயது நிறைவடைந்து, அதனையடுத்து திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தனது மனைவி ஷோபா வுடன் சென்று ஆயுள் விருத்தி யாகம் செய்து வழிபட்டார்.
இவரது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் எதிலும் அவரது மகனான நடிகர் விஜய் கலந்து கொள்ள வில்லை.
இந்நிலையில் வருகிற ஜூலை -6 ஆம் தேதி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதை அறிந்த விஜய்யால் நீக்கப்பட்ட அவரது தந்தையின் ஆதரவாளர்களும் சென்னையில் தங்கியுள்ளனர். இவர்கள் இன்று ஜூலை -5 எஸ்.ஏ. சந்திரசேகரைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிய வருகிறது.
இது சம்பந்தமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகியிடம் பேசியபோது…. 6 ஆம் தேதி தளபதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவதாக அழைப்பு விடுத்துள்ளதால், நாங்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி எதுவும் பேசப் படலாம் என்றார். அவரது தந்தை 5 ஆம் தேதி நிர்வாகிகளை சந்திக்கிறாரே என கேட்டபோது… தளபதியிடம் தற்போது வெங்கட் , குஷி ஆனந்த் ஆகிய இருவரும் தான் நம்பிக்கையானவர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் சொல்வதை மட்டுமே தளபதி கேட்கிறார்.
வெங்கட் ஏற்கனவே தளபதியால் வெளியேற்றப்பட்டு எஸ்.ஏ.சி மூலமாகத்தான் மீண்டும் உள்ளே வந்தார். இப்போது இந்த இருவர் சொல்வதைத் கேட்டு தனது தந்தையையே ஒதுக்கி வைத்துவிட்டார். அவரது பிறந்த நாளுக்கு கூட அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை தந்தை, மகன் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும். தாய், தந்தையை மதிக்க வேண்டும் என அவரது படங்களில் பேசப்படும் வசனங்களைப் பார்த்து ரசிகர்களாகிய நாங்கள் பின்பற்றுகிறோம். அதை பேசும் அவரும் பின்பற்றுவார் என்றே நம்புகிறோம் என்றார்.
தற்போது அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து தனித்தனியாக ஆலோசனை நடத்துவது போல், நடிகர் விஜய்யும், அவரது தந்தையும் தனித்தனியாக ஆலோசனை நடத்த இருப்பது எங்கே போய் முடியப் போகிறதோ என்கிற குழப்பத்தில் தவிக்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.