உயிர் காக்க ஊரடங்கு… : விழிப்புணர்வு அவசியம்..!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஊரடங்கு போட்டாலும், அதனால் நமக்கென்ன என்பது போல் வழக்கமாக இயங்கி வருகின்றனர் வட சென்னை பகுதி மக்கள்….
ஒன்று கூடி கூட்டமாக அன்பாக வாழும் மக்கள், நெரிசலான தெருக்களிலும் அடுத்தடுத்து வீடு…இது வட சென்னையின் அடையாளம்.
ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருபவர்களை விட, கடைத் தெருவில் நின்று கதை பேசிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்கும் கூட்டம் தான் அதிகம்
பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள காய்கறி சந்தையில் காவலர் ஒருவர் தொண்டை நீர் வற்ற வற்ற, சமூக விலகல் பற்றி மைக்கில் கதறி கொண்டிருந்தார். ஆனால் சந்தைக்கு வந்த கூட்டமோ அதை பொருட்படுத்தாமல் அருகேருகே நின்று கொண்டு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டம் போட்டு வரிசையில் நிற்க வைக்க வேண்டும் என்ற எந்த விதியும் இந்த பகுதிகளுக்கு பொருந்தாது என்பது போல இருந்தது இந்த காய்கறி சந்தை.
இதனிடையே, நெரிசலாக மக்கள் வாழும் பகுதி என்பதால் இந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையின் சிறிய ரக மீட்பு வாகனங்களை கொண்டு தெரு, சந்து என குறுகலான பகுதிகளுக்கு கொண்டு சென்று கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர்.
சிறிய சந்துகளில் பெரும் சிரத்தை எடுத்து வாகனங்களை கொண்டு கிருமி நாசினியை தெளித்தாலும், வெளியில் சுற்றும் இப்பகுதி மக்களால் அத்தனை பணிகளும் பாழாகிறது என சுகாதாரத்துறையினர் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
சென்னையின் ஒரு பகுதியில் சமூக விலகலின் அவசியத்தை உணர்ந்து வீட்டுக்குள் முடங்கினாலும், ஒரு பகுதி சென்னைவாசிகள் ஊரடங்கிற்கு அடங்காமல் சுற்றுவது அடுத்த நாட்கள் மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது. இயல்பாகவே சமூக விலகல் சாத்தியபடாத வட சென்னை பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வும் அவசர அவசியம் என்பதே களத்தின் நிலவரம்.
சென்னையில் பெரும்பாலான உணவு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதால் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களும், பூனைகளும் உணவின்றி தவித்து வருகின்றன. அவற்றின் அட்சயபாத்திரமான குப்பை தொட்டிகளை பசியுடன் பரிதாபமாய் சுற்றிச்சுற்றி வருவதுதான் சோகத்திலும் சோகம்.
கொரோனா ஊரடங்கு அன்றாட வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கின்ற ஏழை எளிய மக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கி உள்ளது. அரசின் இலவச அரிசி பருப்பு, எண்ணெய் வழங்குவதாக அறிவித்து நாட்கள் பல கடந்தாலும் தற்போது வரை ரேசன் டோக்கன்கள் பல வீடுகளுக்கு சென்று சேரவில்லை..!
உழைக்கும்மனிதர்களே பசியால் வாடும் நிலையில்மனிதர்களுக்கு விசுவாசமாக தெருவில் வலம் வரும் நாய்மற்றும் பூனைகளின் நிலை எப்படி நலமாகஇருக்கும்? சென்னையில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு விட்டது. இதனால் உணவகங்களில் இருந்துவிழும் மிச்சம் மீதியை உண்டுஉயிர் வளர்த்த தெருவிற்கு காவலனாகவலம் வந்த நாய்களும், எலிகளைஒலிக்கும் வேட்டையனான பூனைகளும் தங்களுக்கு அட்சய பாத்திரமாக விளங்கியகுப்பை தொட்டிகளை ஏக்கத்துடன் வலம் வருகின்றது.
அருகில் திறந்திருந்த மளிகை கடைவாசலில் தவம் இருந்த பூனை, ஒரு கட்டத்தில் தனக்கு கிடைத்த பிஸ்கட்டை உண்டு பசியாற்றியது..
உணவக மிச்சம் மீதிகள் கைகொடுக்காத நிலையிலும் கூட விழிம்பு நிலை மனிதர்கள் எப்போதும் இவற்றை அக்கறையுடன் உணவளித்து பாசத்துடன் பார்த்துக் கொள்வார்கள். எந்த ஒரு தொழிலும் இல்லாமல் முடக்கப்பட்டு உள்ளதால் அவர்களே சாப்பாட்டிற்கு கையேந்தும் நிலையில் உள்ளதால் இவற்றை கவனிக்க இயலாத கையறு எற்பட்டுள்ளது.
யாராவது எதையாவது சாப்பிட தூக்கி போடமாட்டார்களா? என்ற பரிதவிப்பில் நடக்க கூட இயலாமல் பசியில் ஆங்காங்கே படுத்து கிடக்கின்றன. வீடுகளில் இருந்து கொட்டப்படும் உணவு சிதறல்களில் ஏதாவது கிடைக்குமா என்று சில நாய்கள் பசியுடன் தேடுகின்றன..!
இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டும் அல்ல என்பதை உணர்ந்த பெண் ஒருவர் பட்டினப்பாக்கம் பகுதியில் தெருவில் சுற்றிதிரியும் நாய்களுக்கு பாசத்துடன் உணவு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
தெருவை காக்கும் நாய்கள் இப்படி சாப்பாட்டிற்கு அல்லாடிக் கொண்டிருக்க, வீட்டில் சொகுசாக வளர்க்கப்படும் தின்று கொழுத்த செல்லபிராணியோ, தின்பதற்கு சோம்பல் பட்டு படுத்து கிடக்கின்றது, அதன் எஜமானி வந்து தலையில் 2 தட்டு தட்டியதும் அவசர அவசரமாக உணவை சாப்பிடுகின்றது.
விலங்குகள் மூலம் ஒருபோதும் கொரோனா நோய் தொற்று ஏற்படாது என்று உலக சுகாதார நிறுவனமே அறிவித்து விட்டது. எனவே நாய்களுக்கும் பூனைகளுக்கும் பசிக்குமில்ல…? அவற்றிற்கும் உங்களால் முடிந்த உணவுகளை கொடுத்து கவனிங்க…! ஏனெனில் எல்லோரும்.. எல்லாமும்… இன்புற்றிருக்கட்டும்..!
– நமதுநிருபர்