கஞ்சா வியாபாரியாக செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன்!
பல்லாவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயன்ற 2 பேர் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் கஞ்சா வியாபாரி ஆக வேண்டும் என்பதற்காக செயின் பறிப்பில் ஈடுபடுவதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜமீன் பல்லாவரம், ரேணுகா நகரை சேர்ந்தவர் கீதா. 8 மாத கர்ப்பிணியான இவர் கடந்த 9-ஆம் தேதி தனது வீட்டின் வெளியே உள்ள பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் வந்தனர், ஒருவர் மட்டும் இருசக்கர வாகனத்தில் இருந்துகொண்டு மற்றொருவர் கீழே இறங்கி கீதாவின் அருகே வந்து கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தாலிச் செயினை பறிக்க முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட கீதா தாலிச் செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டு கொள்ளையனுடன் போராடினார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன், கீதாவை கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் பட்டப் பகலில் நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கி சாலையில் தரதரவென இழுத்து போட்டு செயினை பறிக்க முயன்றார். வலி பொறுக்க முடியாமல் தவித்த கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.இதனைக் கண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்களிடம் செயினை காப்பாற்ற போராடிய கீதாவிற்கு கை, கால்களில் கடுமையான சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டது. உடனே கீதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடந்த சம்பவங்கள் அனைத்தும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக பல்லாவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் 5 பேர் கொண்டதனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது மதுரையை சேர்ந்த கொடூர கொள்ளையன் தினேஷ்குமார் என்பது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் மதுரைக்குச் சென்ற தனிப்படையினர் அங்கு தினேஷ்குமார் பற்றி விசாரணை செய்தனர் அப்போது அவர் சென்னையில் இருப்பதாக தெரிவித்தனர்.
உடனே தனிப்படையினர் சென்னைக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பல்லாவரம் திரிசூலம் மலையில் பதுங்கியிருந்த தினேஷ்குமாரை பிடிக்க சென்றபோது கஞ்சா புகைத்து கொண்டு அவனுடன் சேர்ந்து 5 பேர் இருந்துள்ளனர், அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது தினேஷ் குமார் மட்டும் போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓடினான். போலீசார் விரட்டி பிடிக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்த தினேஷ்குமாருக்கு கை முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு 5 பேரையும் கைது செய்து பல்லாவரம் காவல் நிலையத்திற்க்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில்
பல்லாவரத்தில் செயின் பறிப்பில் ஈடுபடும்போது வாகனத்தை ஓட்டிய கிரண்குமார் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார், மதுரையைச் சேர்ந்த விஜய், மற்றும் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என தெரியவந்தது.
கடந்த 7 ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு 8 ஆம் தேதி பெருங்களத்தூர் கட்டபொம்மன் தெருவில் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு பல்லாவரத்தில் இருக்கும் நண்பன் தினேஷ் குமார் வீட்டுக்கு வந்ததாகவும் காலையில் மதுரைக்கு செல்வதற்கு முன்னர் பல்லாவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சி செய்ததாகவும் அதில் தோல்வியடைந்ததால் குரோம்பேட்டையில் 5 சவரன் செயின் பறிப்பு அதன்பிறகு தாம்பரம், பெரவள்ளுர் மற்றும் அங்கிருந்து இராஜபாளையம் சென்று அங்கே ஒரு பெண்மணியிடமிருந்து 4 சவரன் செயின் பறித்துக் கொண்டு தப்ப முயன்றபோது பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டதாகவும் அங்கே இரு சக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பிச் சென்றதாக தெரிவித்தனர்.
இரண்டு நாட்களுக்குள் 8 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.
குற்றவாளிகளிடம் இருந்து 4 சவரன் தங்க நகை மற்றும் 1 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குற்றவாளியான மதுரை தினேஷ்குமார் மீது மதுரை மாவட்டம் அண்ணாநகர் காவல் நிலையத்தில் 1 கொலை, 1 கொலை முயற்சி மற்றும் இரு சக்கர வாகனம் திருட்டு, செயின் பறிப்பு போன்ற 24 வழக்குகள் உள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
சென்னையில் கஞ்சா வியாபாரியாக வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்ததாகவும் சென்னையில் கஞ்சா விற்பனையில் போட்டிகள் அதிகமாக இருப்பதால் கஞ்சா வியாபாரி ஆக முடியவில்லை என்பதால் மதுரையில் மிகப்பெரிய கஞ்சா வியாபாரியாக வேண்டும் என்றால் அதிக பணம் வேண்டும் என்பதற்காகவே செயின் பறிப்பில் ஈடுபடுவதாக தினேஷ்குமார் வாக்குமூலம் அளித்தார்.
அது மட்டுமின்றி செயின் பறிப்பில் ஈடுபடும் போது செயினை தர மறுத்தால் கொடூரமாக தாக்கி விட்டு செயின் பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பிறகு பல்லாவரம் போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
– நமது நிருபர்