தீபாவளியும் பிகிலும்..!
நடிகர் விஜய்யின் பிகில் படத்திற்கான டிக்கெட்டை இலவசமாக தரப்போவதாக சில தனியார் நிறுவனங்கள் அறிவித்தது, சர்க்கார் படத்திற்கு பின்னர் இலவசத்தை எதிர்த்து வரும் விஜய் ரசிகர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது…
வீட்டில் சாப்பாட்டில் சிறு கல் கிடந்தாலே கொந்தளிக்கும் இவர்கள், நடிகர் விஜய்யின் பிகில் படம் நன்றாக ஓடி, 200 கோடி ரூபாய்க்கு படத்தை விற்றுள்ள ஏழை தயாரிப்பாளர் இன்னும் பல கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சோற்றை தரையில் கொட்டி சாப்பிட்டு நேர்த்தி கடன் செய்கின்றனர்.
நடிகர் விஜய் மீது வெறித்தனமான அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் விஜய் படத்தில் சொல்லும் கருத்தை பின்பற்றி வருவது வழக்கம். அதனால் தான் சர்க்கார் படத்தில் இலவசத்துக்கு எதிராக விஜய் திரையில் இலவச டிவி, மிக்ஸி கிடைண்டர் மின்விசிறியை தீயில் போட்டு எரித்து செய்த ஒரு விரல் புரட்சியை, வீட்டில் இருந்த இலவச பொருட்களை தூக்கி வந்து தரையில் வீசி செய்து காட்டினர்.
டிக்டாக்கில் தளபதியின் ரசிகர்கள் இலவசத்துக்கு எதிரானவர்கள் என்று பகிரங்கப்படுத்தி வந்த நிலையில் தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில் படத்தின் டிக்கெட்டையே இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ள சில தனியார் நிறுவனங்களால் விஜய் ரசிகர்களுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.
முதல் நாள் பிகில் படத்திற்கு திரையரங்குகளில் ஒரு டிக்கெட் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விலை வைத்து விற்கும் நிலையில் 1500 ரூபாய்க்கு ஜவுளி வாங்கினால் பிகில் டிக்கெட் இலவசம், மொபைல் ரீசார்ஜ் செய்தால் பிகில் டிக்கெட் இலவசம், 2000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் 2 பிகில் டிக்கெட் என்று பல்வேறு நிருவனங்கள் பிகில் டிக்கெட்டையே இலவசமாக வழங்க தயாராகியுள்ள நிலையில் இலவசத்துக்கு எதிரான விஜய் ரசிகர்கள் அதனை பெற்றுக் கொள்வார்களா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இலவச அறிவிப்புகள் விஜய்யின் கொள்கை மீது பற்றுள்ள ரசிகர்களுக்கு சத்திய சோதனையாக அமைந்துள்ளது.
களியக்காவிளையில் விஜய் ரசிகர் மன்றத்தினர் திரையரங்குகளில் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு ஒரு டிக்கெட் 300 ரூபாய்க்கு பேரம் பேசி விற்று வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இங்கு மட்டும் அல்ல தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் கட்டணம் வசூலித்து சிறப்பு காட்சி வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயாராகி வருகின்றனர். கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கு சில விஜய் ரசிகர்களும் தயாராகவே உள்ளனர்.
அந்தவகையில் பிகில் தீபாவளி சிறப்பு காட்சிக்கு சில நிபந்தனைகளோடு அனுமதி கிடைத்து விடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து கேட்டதற்கு, தீபாவளிக்கு திரையரங்குகளில் எந்த திரைபடத்துக்கும் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், அதை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடுவது மற்றும் அதற்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பு ஏற்காது என்றும் கூறினார்.
அதேபோல், அரசு அனுமதி அளிக்காத நேரத்தில், திரையரங்குகளில் காட்சி ஒளிபரப்பு செய்தால் சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்தார்.
பிகில் படக் கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிகில் கதை தன்னுடையது எனக் கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் செல்வா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், கதைக்கு காப்புரிமை கோரினார். அதை நீதிமன்றம் ஏற்காததால், வழக்கை திரும்பப் பெற்றார். காப்புரிமை தொடர்பாக மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக கூடாது என அந்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், காப்புரிமை மீறல் தொடர்பாக மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கேட்டு செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.
விளம்பரம் மற்றும் பணம் பறிப்பதற்காகவே கடைசி நேரத்தில் செல்வா வழக்கு தொடர்ந்ததாக பட நிறுவனம் மற்றும் அட்லி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிகில் படக் கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக செல்வாவுக்கு அனுமதி வழங்கினார்.
நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த பிகில் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவில்,”பூக்கடைக்காரனை பட்டாசுக் கடையில் வேலைக்கு வச்சா, பட்டாசு மேல தண்ணீர் தெளிச்சுடுவான். எனவே, அவனவன வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்“ எனப் பேசினார்.
விஜயின் இந்த பேச்சு, பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. குறிப்பாக மேடைப் பேச்சாளர் ஒருவரின் வசனத்தை நடிகர் விஜய் காப்பி அடித்துள்ளார் என விடியோ ஆதாரங்களோடு இணையத்தில் பல வீடியோ மீம்கள் வைரலாகியது.
இந்நிலையில், இப்போது பூ வியாபாரிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ‘விஜய் பூ வியாபாரிகள் குறித்துக் கூறிய கருத்தை திரும்பப்பெறவில்லை என்றால், மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என பூ வியாபாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, திருச்சி ஸ்ரீரங்கம் சாத்தாரவீதி பூ சந்தை, அண்ணா புஷ்ப தொழிலாளர்கள் சங்கம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும், மாவட்டம் தோறும் சுமார், தலா ஒரு லட்சம் பேர் பூ வியாபாரத்தை நம்பியுள்ளோம். தெய்வீக தொண்டாற்றி வரும் எங்களை அவமதிக்கும் வகையில் நடிகர் விஜய் பேசி இருக்கிறார். அவரது கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் மாவட்டம் தோறும் பூ வியாபாரிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். அடுத்தபடியாக அவரது படத்தை பூ தொழிலாளர்கள் அனைவரும் புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தை அடுத்து பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அரசியல்வாதிகள் முழங்கினர். அதேபோல் திரையுலகினரும் பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தினர்.
அதையடுத்து காப்பான் படம் வெளியான போது சூர்யாவின் ரசிகர்கள் இலவசமாக தலைக்கவசத்தை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். அசுரன் திரைப்படம் வெளியான போதும் தனுஷ் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர்.
தீபாவளியை முன்னிட்டு விஜய்யின் பிகில் திரைப்படம் ரிலீசாக இருந்த நிலையில் நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள், கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை காவல்துறை அதிகாரியின் ஆலோசனையின்பேரில் அமைத்து கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், “பெண்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி அமைத்து கொடுத்த விஜய் நற்பணி இயக்கத்திற்கு நன்றி. நெல்லை விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
- சூரியன்