அறிவியல் கலந்த ஆன்மீகமா..!.? “மாயோன்” விமர்சனம் – 4/5
அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, தயாரித்துள்ள “மாயோன்” திரைப்படத்தை கிஷோர் இயக்கியுள்ளார். இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொல்லியல் துறையில் ஆய்வுப் பணி மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றனர். இந்த மர்ம மரணங்களை கண்டுபிடிக்க காவல்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தும் போது, நமது நாட்டின் பழங்கால கலைப் பொக்கிஷங்கள் மற்றும் சிலைகளை கடத்தி வெளிநாட்டில் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க வேண்டும். மேலும் வெளிநாட்டில் இருந்து இவர்களை இயக்கும் இந்த கும்பலின் தலைவனை பிடிக்க வேண்டும் என தீர்மானிக்கின்றனர். இதற்கு கே.எஸ். ரவிக்குமார் பொறுப்பேற்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாயோன் மலை என்னும் சிற்றூரில் ரவிக்குமார் தலைமையில் தொல்லியல் துறையினர் ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது. அப்போது இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கிருஷ்ணர் கோயிலில் ரகசிய அறையில் புதையல் இருப்பதாக ஓலைச் சுவடிகள் மூலம் அறிந்து, அதனை எடுத்து வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கு திட்டமிடுகிறார் தொல்லியல் துறை அதிகாரி ஹரிஷ் பெரடி. இவரது முயற்சிக்கு கை கொடுக்கிறார் அதே துறையின் திறமையான இளம் அதிகாரி சிபி சத்யராஜ்.
நமது நாட்டின் கலைப் பொக்கிஷங்களை அந்நியர்கள் அபகரித்து விடாமல் தடுப்பதற்காக, நமது முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள தடைகள், அமானுஷ்யங்களை கடந்து கோவிலில் உள்ள புதையலை எடுத்தார்களா என்பது மீதிக்கதை.
ஆன்மீகமும் அறிவியலும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என இரண்டிற்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் கிஷோர். நாயகன் சிபி அறிவியல் பூர்வமாக பழங்கால சம்பவங்களோடு தொடர்பு படுத்தி பேசும் வசனங்கள் பாராட்டப்பட வேண்டியது. படத்திற்கு இளையராஜாவின் இசை மேலும் வலு சேர்க்கிறது.
பழங்கால பொக்கிஷங்களை பாதுகாக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டு, அதில் அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பை அற்புதமாக வெளிப்படுத்திய இயக்குனருக்கு பாராட்டுக்கள்.