ராம் பொதினேனி, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள “தி வாரியர்” ஜூலை – 14 வெளியீடு
இயக்குநர் N லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் திரைப்படம் “தி வாரியர்”. ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில், ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
படத்தின் வெளியீட்டினை ஒட்டி தமிழ் திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பாரதிராஜா, மணிரத்னம், ஆர்.கே.செல்வமணி, ஷங்கர், பார்த்திபன்,வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், சிவா, எஸ்.ஜே. சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், விஜய் மில்டன், நடிகர் விஷால் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பாரதிராஜா பேசுகையில்… இயக்குனர் லிங்குசாமி காதல் உணர்வு அதிகம் கொண்டவர், அதனால்தான் பல விஷயங்களை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த முடிகிறது. இந்தப் படத்தில் ராம் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி இன்னும் பல வருடங்கள் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் நடிகையாக இருப்பதற்கான அனைத்து அம்சங்களும் குணங்களும் கொண்டவராக இருக்கிறார். லிங்குசாமிக்கு அவரைச் சுற்றி நல்ல குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளனர், இது அவரை வரும் ஆண்டுகளில் பெரிய சாதனைகளைச் செய்ய முன்னோக்கி தள்ளும் என்றார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில்.., தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ராம் பொதினேனிக்கு வாரியர் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப் போகிறது. படம் வெளியானதும் அவருக்கு தமிழக ரசிகர்கள் சிவப்பு கம்பளம் விரிக்கப் போகிறார்கள். இந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் லிங்குசாமி தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போகிறார். பிருந்தா சாரதி ஸ்கிரிப்டை விவரிக்கும் போது, ஒவ்வொரு ஷாட்டுக்கும் பார்வையாளர்களின் துடிப்புடன் தொடர்பு இருப்பதை என்னால் உணர முடிந்தது. மேலும் அவர் அனைவருக்கும் உதவும் மனபான்மை கொண்டவர். மணிரத்னம், ஷங்கர் போன்ற திரையுல ஜாம்பவான்கள் இங்கு இருப்பதற்கு லிங்குசாமியின் குணமே முக்கியக் காரணம் என்றார்.
தயாரிப்பாளர் அன்பு செழியன் பேசுகையில்.., பையா படத்திலிருந்து லிங்குசாமியுடன், நான் பயணித்து வருகிறேன். பையா படத்தின் பாடல்களை கேட்டத்தில் இருந்தே அது பெரிய வெற்றியடையும் என்று நான் கூறினேன், அதுபோலவே அந்த படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்போது, வாரியர் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். லிங்குசாமி இன்னும் நிறைய படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ராம் மற்றும் கீர்த்தி சிறந்த நடிகர்கள், கோலிவுட்டில் அவர்களின் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது. தேவிஶ்ரீ பிரசாத்தின் இசை இப்போது ஒரு ஹாட் சென்சேஷனாக இருக்கிறது, இந்த படம் அவருக்கு மேலும் ஒரு வெற்றியை கொண்டுவரும் வாழ்த்துக்கள் என்றார்.
நடிகர் விஷால் கூறியதாவது..,
லிங்குசாமியை உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே எனக்கு தெரியும். அவர் ஒரு அற்புதமான மனிதர், எனது தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். அவரை சினிமாதுறையில் வெற்றிகரமான நபராக பார்க்க வேண்டும் என்று எனக்கு எப்போதும் ஒரு ஆசை இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் மீண்டும் ஒரு பிரமாண்டமான இயக்குனராக மறுபிரவேசம் செய்வார் என்பது உறுதி. ராம் மீது எனக்கு பொறாமையாக இருக்கிறது, ஏனென்றால் அவர் லிங்குசாமியின் மிகச்சிறந்த ஸ்கிரிப்டில் ஒரு பகுதியாக மாறியுள்ளார். லிங்குசாமி பல துன்பங்களையும் துயரங்களையும் கடந்து வந்துள்ளார். அவருடைய மனநிலையையும், வாரியர் திரைப்படம் எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என்பதையும் என்னால் இப்போது தெளிவாக உணர முடிகிறது. இன்று, தென்னிந்திய சினிமா வளர்ச்சியைக் கண்டு ஒட்டுமொத்த பாலிவுட்டும் அதிர்ச்சியில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் எங்களிடையே உள்ள ஒத்துழைப்பு தான். இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற போகிறது என்றார்
இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “வாரியர் என்ற தலைப்பே மிகவும் பிரமிக்க வைக்கிறது. இந்த டிரெய்லரில் ராமைப் பார்க்கும்போது, அவர் துடிப்பாக இருக்கிறார். இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன். கீர்த்தி ஷெட்டி தனது முதல் படத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார், மேலும் அவர் பல படங்களில் பணியாற்றவும், கீர்த்தி சுரேஷ் போன்று தேசிய விருது பெறவும் வாழ்த்துகிறேன். டிரெய்லரே ஆனந்தம், ரன், சண்டக்கோழி போன்ற படங்களில் உள்ள ஹீரோ-வில்லன் சண்டை, குடும்ப உணர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. இந்த மூன்று படங்களின் கலவையும் இங்கே வாரியர் படத்தில் வரப்போகிறது. லிங்குசாமி ஒரு சிறந்த கவிஞர், நல்ல உள்ளம் கொண்டவர், இந்தப் படத்தின் மூலம் நிச்சயம் வெற்றி பெறுவார்.
நடிகர் ராம் பொத்தினேனி பேசுகையில், எனது நீண்ட நாள் கனவான தமிழ் சினிமா அறிமுகம் இப்படி பிரமாண்டமாக அமையும் என நினைக்கவில்லை. ‘புல்லட்’ பாடலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி. அற்புதமான ஆல்பத்தை வழங்கிய தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நன்றி. ஆதி ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். புல்லட் பாடலை பாடிய சிலம்பரசன் அண்ணனுக்கு நன்றி. இந்த திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் சிவகார்த்திகேயன் அண்ணன், நடிகர் சூர்யா மற்றும் பிற பிரபலங்களுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் இவ்வளவு பிரமாண்டமாக அறிமுகமானதற்கு நானும் கீர்த்தியும் மிகவும் பாக்கியசாலிகள். என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த தயாரிப்பாளர் சிட்தூரிக்கு நன்றி. இந்த படத்தில் நடிகை நதியா அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இங்கு வந்திருக்கும் அனைத்து ஜாம்பவான்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இயக்குநர் லிங்குசாமி பேசுகையில்.., திரைத்துறையில் பல நண்பர்களின் ஆதரவைப் பெற்றதை நான் பாக்கியமாக உணர்கிறேன். அருமையான பாடல் வரிகளை தந்த விவேகாவுக்கு எனது நன்றிகள். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மத்தியில் மிகச் சில படங்கள் மட்டுமே சரியான ஆற்றலைப் பெறுகின்றன, ராம் மற்றும் டிஎஸ்பியின் எனர்ஜி லெவல்கள் இந்தப் படத்திற்கு சிறப்பாக இருந்ததால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. நதியாவுடன் பணிபுரிய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு, அது தற்போது சரியான திரைப்படத்தில் நடந்துள்ளது. கீர்த்தி ஷெட்டிக்கு மீரா ஜாஸ்மினின் சாயல்கள் உள்ளன, மேலும் அவர் திரைத்துறையை ஆள்வார் என்பது உறுதி. அவருடன் ஆரம்பத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பின்னர் குடும்ப நண்பர்களாகிவிட்டோம். இந்த படத்தில் ஆதி சிறப்பாக பணியாற்றியிருக்கிறார், இதுவரை நான் செய்த படங்களில் அவர்தான் சிறந்த வில்லன். அடுத்த ஆண்டு ‘சிறந்த வில்லன் பிரிவில்’ அதிக விருதுகளை அவர் வெல்வார். சீனிவாச சிட்தூரி போன்ற ஒரு தயாரிப்பாளரை நான் பெற்றது பாக்கியம். அவர் திரைப்படத்தில் எந்த இடத்திலும் தலையிடவில்லை மற்றும் இப்படத்திற்கு அதிக பணம் செலவழித்தார். இந்த திரைப்படத்திற்காக நான் முழு மனதுடன் உழைத்தேன், இப்படம் அவருக்கு நல்ல லாபத்தை தரும். சண்டக்கோழி, பையா நடிகர்களுக்கு எப்படி திருப்புமுனையாக அமைந்ததோ, அதுபோலவே ராமுக்கும் வாரியர் அமையும். இதுவரை என்னுடன் பணியாற்றிய விக்ரம், மம்முட்டி, சூர்யா போன்ற எனது ஹீரோக்களின் கலவை அவர். இந்தப் படத்தை ஆதரித்த சிம்பு, சூர்யா மற்றும் அனைவருக்கும் நன்றி. ‘புல்லட்’ பாடலை வெளியிட்டு இந்தப் படத்தை ஆதரித்த உதயநிதிக்கு நன்றி என்றார்.