இந்தியா

ரிசர்வ் வங்கி அறிவிப்பு தெளிவற்றது..! : ப.சிதம்பரம்!

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகைகளை பிரதமர் மோடி வரவேற்றுள்ள நிலையில், அரைமனதுடன் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.

இதனால், மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஊதியம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதால் வங்கிகளில் வாங்கிய கடனைச் செலுத்துவது, ஈஎம்ஐ கட்டணங்களைச் செலுத்துவது கடினமாகியுள்ளது. இந்த விஷயத்தில் வங்கிகள் சலுகை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

வங்கிகள் ஈஎம்ஐ வசூலிப்பை 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கடிதம் எழுதியிருந்தார். அதேபோல், எல்லா வகையான வரிகளையும் கட்டுவதற்கும், வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாத தவணை (ணிவிமி) இறுதி நாட்களையும், 30-.6-.2020க்கு ஒத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச திட்டத்தை மத்திய அரசின் பரீசீலனைக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ரிசர்வ் வங்கி தீவிரமாக கவனித்து வருகிறது. ரெப்போ விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான 3 மாத தவணைகள் தள்ளி வைக்கப்படுகிறது. கடன் செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபட கூடாது. மூன்று மாதம் கழித்து தொடர்சியாக தவணையை கட்டவேண்டும். இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்பட கூடாது” என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு நடுத்தர மக்கள், தொழில் நிறுவனங்களுக்கு உதவும் இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க மாபெரும் நடவடிக்கை எடுத்துள்ள ரிசர்வ் வங்கிக்கு பாராட்டு எனவும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ரெப்போ வீதத்தைக் குறைப்பதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவையும், அதிக பணப்புழக்கத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈ.எம்.ஐ. தேதிகளை ஒத்திவைப்பது குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு தெளிவற்றதாகவும் அரை மனதுடனும் உள்ளது. அனைத்து ஈ.எம்.ஐ. செலுத்த வேண்டிய தேதிகளும் தானாக ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கை எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button