ஐந்தறிவு ஜீவனின் உணர்வுகளுக்கு நீதி கிடைக்குமா ?.! “கூரன்” படத்தின் திரைவிமர்சனம்

கனா புரொடக்ஷன்ஸ், வி.பி கம்பைன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், ஒய். ஜி மகேந்திரன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிப்பில், நிதின் வேமுபதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கூரன்”.
கொடைக்கானலில் ஒரு நாய் தனது குட்டியுடன் நடந்து செல்கிறது. அப்போது ஒருவர் குடித்துவிட்டு பாடாடிலை சாலையில் எறிந்து விட்டு வேகமாக அலைபாய்ந்து செல்லும் போது, நாயின் குட்டியை ஏற்றிவிட்டு உற்சாகமாக செல்கிறார். குட்டியின் மரணத்தை தாங்கமுடியாமல், அந்த காரை சிறிது தூரம் பின் தொடர்ந்து, பின்னர் காவல் நிலையம் செல்கிறது. காவல்நிலையத்தில் உள்ளவர்கள் விரட்டி அடிக்க, காவல்நிலைய வாசலிலேயே காத்திருக்கிறது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ( தர்மராஜ் ) எஸ்.ஏ சந்திரசேகர் காவல்நிலையத்திற்கு வருகிறார். அங்கு உதவி ஆய்வாளர் ஏன் நீங்கள் பத்து ஆண்டுகளாக எந்த வழக்குகளையும் எடுக்காமல் இருக்கிறீர்கள் ? உங்களைப் போன்ற திறமையான வழக்கறிஞர்கள் வாதாடினால்தானே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என கூற, அதை கேட்டுக்கொண்டே வெளியே வருகிறார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த நாய் அவரை பின்தொடர்ந்தது செல்கிறது. பின்னர் இரண்டு நாட்களாக அவரையே பின்தொடர, வழக்கறிஞர் தர்மராஜ் நாய் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்து, அதை பின்தொடர்ந்தது செல்ல, தனது குட்டி அடிபட்ட இடத்தையும், புதைக்கப்பட்ட இடத்தையும் காண்பிக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களை யூகித்து, நாய்க்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என புகார் மனுவுடன், காவல்நிலையத்திற்கு நாயுடன் செல்கிறார்.
புகார் மனுவை காவல்நிலையத்தில் ஏற்றுக்கொண்டார்களா ? குட்டியை பறிகொடுத்த தாய் நாய்க்கு நீதி கிடைத்ததா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…

படம் ஆரம்பித்ததிலிருந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது ஜான்சியின் ( நாய் ) நடிப்பு. இந்த உலகில் மனிதர்கள் மட்டுமல்ல, நாய் உள்ளிட்ட ஐந்தறிவு ஜீவன்களும் வாழத் தகுதி படைத்தவர்கள், அனைவருக்கும் ஒரே சட்டம் தான் என அரசியல் சாசனம் சொல்வதை, தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர். குட்டியை பறிகொடுத்த தாய் நாயின் உணர்வுகளையும், பார்வையற்றவரின் உணர்வுகளையும் ஆதாரங்களாக ஏற்று, நீதி வழங்கலாம் என்பதையும் இயக்குநர் பதிவு செய்துள்ளார்.
முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.ஏ. சந்திரசேகர், தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஓய்.ஜி. மகேந்திரன், ஜார்ஜ் மரியான், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.