பல்லடம் அருகே ரோட்டைக்காட்டி வீடு கட்டச்சொன்ன அதிகாரி : அதிர்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள கே. கிருஷ்ணாபுரம் முனியப்பன் கோயில் அருகே நடந்த கூத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கோவை மாவட்ட எல்லைப்பகுதியான காமநாயக்கன்பாளயத்தை அடுத்த வடுகபாளையத்தை சேர்ந்த ராஜசேகரன்(42) என்பவர் ராமச்சந்திரன் என்பவரிடம் இருந்து 10 செண்ட் இடத்தை கிரையம் பெற்றுள்ளார். பின்னிட்டு அந்த இடம் பராமரிப்பின்றி கிடந்தது. இந்நிலையில் மேற்படி இடத்தை ஒட்டியுள்ள அதே பூமியை ராமச்சந்திரன் மற்றொரு நபருக்கு விற்றுள்ளார். இதனை அடுத்து அந்த இடத்தை கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி முன்னிலையில் அளவீடு செய்து பார்த்தபோது மேற்படி ராஜசேகர் கிரையம் பெற்ற இடம் மாநில நெடுஞ்சாலையில் உள்ளதாக கூறி குறியீடு இட்டு சென்றுள்ளனர். இதற்கு ராஜசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் செய்தனர்.
இதனை அடுத்து பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால் முன்னிலையில் அளவீடு மேற்கொண்டதில் நெடுஞ்சாலை துறையினர் பட்டா நிலத்தை அளவீடு செய்யாமல் கடந்த 2 ஆண்டுகளாக ஆக்கிரமித்து தார் சாலை அமைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதனை அடுத்து பேசிய வட்டாட்சியர் தற்போது மேற்கொள்ளப்பட்ட அளிவீட்டின் படி 80 சதுரடி நிலம் நெடுஞ்சாலை அமைந்துள்ள பகுதியில் இருப்பதால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் ஆலோசித்துவிட்டு பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். அளவீடே செய்யாமல் நெடுஞ்சாலை துறை எவ்வாறு சாலை அமைத்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
– நமது நிருபர்