பிளாஸ்டிக் ஒழிப்பு.. சுற்றுச்சூழல் பாதுகாப்பு…
பிளாஸ்டிக் கழிவுகளை வசிப்பிடத்திற்குள் எரித்தாலும் பொதுஇடத்தில் எரித்தாலும் இனி அபராதம் விதிக்கப்படும், இது தொடர்பான வரைவு நெகிழி கழிவுகள் மேலாண்மை துணை விதிகளை பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது..
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்பை நிகழ்காலத்திலேயே கட்டுப்படுத்தும் நோக்கில் ஒருமுறை பயண்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் உற்பத்தி செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஆங்காங்கே கண்டிப்புடன் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் இதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவாலை முன்கூட்டியே கணித்த மாநகராட்சி நிர்வாகம் வார்டு ஒன்றுக்கு ஒரு குழு என 200 சிறப்பு குழுக்கள் அமைத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மையிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரும் நோக்கில் வரைவு நெகிழி கழிவுகள் மேலாண்மை துணை விதிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த துணை விதிகளின் படி, மக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீது மறுசுழற்சி செய்யக்கூடியது அல்லது எரியூட்டக்கூடியது என தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அச்சிட்டிருக்க வேண்டும். தவறினால் , 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தனிநபர் ஒருவர் பிளாஸ்டிக் கழிவுகளை தன்னுடைய வசிப்பிடத்திற்குள் எரித்தால் 1000 ரூபாய் அபராதமும் அதுவே பொது இடங்களில் எரித்தால் 2000ரூபாய் அபராதமும் கல்வி அல்லது பிற நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை எரித்தால் 10000ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் குப்பிகளை வியாபார நிறுவனங்கள் வெளியேற்றினாலோ அல்லது எரித்தாலோ 15000ரூபாய் அபராதம் என அபராத வகைகள் விளக்கப்பட்டுள்ளன.
சில்லரை வியாபாரிகள் மற்றும் தெரு வியாபாரிகள், பொருட்களை எடுத்துச்செல்லும் பிளாஸ்டிக் பைகள் அல்லது பன்னடுக்கு பிளாஸ்டிக் சிப்பப்பொருட்கள் மீது மறுசுழற்சி செய்யக்கூடியது என பெயரிடப்படாமல் இருந்தால் அதனை நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யவோ வழங்கவோ கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள் கட்டாயமாக தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு வருடமும் தயாரிப்பு நிறுவனங்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் வருடாந்திர அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்ய தவறினால் 5000ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என வரைவு நெகிழி கழிவுகள் மேலாண்மை துணை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிகள் குறித்த கருத்துகள் அல்லது ஆட்சேபனைகளை ஒரு மாதத்திற்குள் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம், சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளிடமிருந்து மாநகரை பாதுகாத்திட பொதுமக்களும் தங்ளுடைய பொறுப்புகளை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
- தே.முத்துப்பாண்டி