நவீன சைபர் கொள்ளையர்கள் : எச்சரிக்கும் போலீசார்..!
பண பரிவர்த்தனை செயலிகளின் சேவை மைய எண்கள் என போலியான எண்களை கூகுளில் பதிவிட்டு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் லட்சக்கணக்கில் மோசடி செய்து வரும் கும்பல் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தபால் துறை மூலம் மணியார்டரில் பணம் அனுப்பி, அதை காத்திருந்து வாங்கிய காலம் போய்… இன்று சில மணி துளிகளில் வங்கி கணக்கில் செலுத்தி விட முடிகிறது. இது போன்ற தொழில் நுட்ப வசதிகள், அதை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு வசதியாக தான் இருக்கிறது என்பது ஒரு பக்கம். ஆனால், இது போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துபவர்களிடம் வித விதமாக மோசடி செய்து பணம் பறித்து வருகிறது மோசடி கும்பல்.
வங்கி பரிவர்த்தனை செயலிகளை போல, பல்வேறு தனியார் பரிவர்த்தனை செயலிகளும் பயன்பாடுக்கு குவிந்து கிடக்கின்றன. பே – டிஎம் (PayTM), கூகுள் பே (Google Pay), போன் பே (Phone pe) போன்ற எண்ணற்ற செயலிகள் பரிவர்த்தனைக்கு எளிதாக இருப்பதால் வாடிக்கையாளர் தேநீர் கடை முதல் துணிகடை வரை இது போன்ற செயலிகளை தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது போன்ற செயலிகளின் சேவை மைய எண் என போலியான எண்களை மோசடி கும்பல் கூகுளில் பதிவிட்டு வாடிக்கையாளர்களிடம் பணம் சுருட்டுகின்றனர்.
சென்னையை சேர்ந்த பள்ளி ஆசிரியை பவுலின் என்பவர் தனது செல்போனிலுள்ள கூகுள்- பே செயலி மூலம் அனுப்பிய ஆயிரம் ரூபாய் பரிவர்த்தனை ஆகவில்லையென கூகுள்- பே சேவை மைய எண்ணை கூகுளில் தேடியுள்ளார். கூகுளில் கிடைத்த போலியான எண்ணை அதிகாரபூர்வ சேவை எண் என கருதி தொடர்பு கொண்டுள்ளார்.
எதிர்முனையில் சேவை மைய ஊழியர் போல் பேசிய மோசடி நபர், பவுலின் செயலியில் பதிவு செய்து வைத்துள்ள செல்போன் எண்ணை மட்டும் வாங்கி அதை, மோசடி நபரின் கூகுள் பே செயலியில் பதிவிட்டு அதன் மூலம் அவரது வங்கி கணக்கு விவரங்களை எடுத்துள்ளார். அனைத்து விவரங்களையும் எடுத்து வைத்து கொண்டு, தற்போது தங்களது செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை கூறினால் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை திருப்பி செலுத்தப்படும் என கூறியுள்ளார்.
இதை நம்பி ஓடிபி எண்ணை தெரிவித்த ஆசிரியை பவுலினின் கணக்கில் இருந்து அடுத்தடுத்து சிறு சிறு தொகையாக 50 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளது மோசடி கும்பல். இதே பாணியில் பல்வேறு பரிவர்த்தனை செயலிகளின் பேரில் போலி சேவை எண்ணை கொடுத்து லட்சகணக்கில் மோசடி செய்துள்ளனர் என்கிறனர் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு போலீசார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 புகார்களாவது பதிவாகிறது. மேலும், கூகுளில் பதிவாகியுள்ள இது போன்ற போலி சேவை எண்களை நீக்குவதற்கான அனுமதியை காவல் துறையினருக்கு வழங்காததால், போலி எண்கள் நீக்கப்படாமல் இருக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் உண்மையான சேவை மைய எண்கள் என நம்பி இந்த மோசடி வலையில் சிக்கிக்கொள்வதை தடுக்க முடியவில்லை என்கின்றனர் காவல் துறையினர்.
அதேவேளையில் வாடிக்கையாளர்கள் சேவை எண் 10 இலக்கங்களை கொண்ட செல்போன் எண்களாக இருந்தால் அவற்றை தொடர்புகொள்ள கூடாது என எச்சரிக்கும் போலீசார், சம்மந்தபட்ட நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் சேவை எண் போலியாக இருப்பதை கவனித்தால் அதை நீக்க நடவடிக்கை எடுப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவை எண் எளிய வகையில் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.