தமிழகத்தில் பாஜகவின் அடுத்த பிளான் ரெடி! : ரஜினி – அதிமுக – பாஜக?
தமிழக அரசியல் களம் ஒவ்வொரு முறையும் ஒரு திருப்பு முனையை அளித்து வருகிறது. கடந்த முறை அதிமுக பெற்ற வெற்றியை இந்த முறை திமுக பெற்று இருக்கிறது. அடுத்து சட்டசபை தேர்தலை தமிழகம் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், அதற்கான திட்டங்களை பாஜக தயாரித்து வருகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி தலைமையிலான அணி 38ல் 37 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 23 இடங்களில் வென்று நாட்டிலேயே மூன்றாவது கட்சியாக திமுக உள்ளது. போட்டியிட்ட 20 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர், விசிகவின் ரவிக்குமார், மதிமுகவின் கணேஷ மூர்த்தி ஆகியோரும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் இந்த முறை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
இவர்கள் இந்த வெற்றியை ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து பெற்றுள்ளனர். மேலும், ஆளும்கட்சி மற்றும் பாஜகவுக்கு எதிரான வெற்றியாகவும் அமைந்துள்ளது. இந்த வெற்றி அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை நீடிக்குமா? என்பது எதிர்காலத்தில் தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகளைப் பொருத்தது.
ஆட்சியில் அதிமுகவை வைத்துக் கொண்டே தமிழகத்திற்குள் ஸ்கெட்ச் போட்டுக் கொண்டு இருக்கிறது பாஜக என்பதுதான் உண்மை. அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த்தும் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆக, அதிமுக, பாஜக, ரஜினி என்பது அடுத்த கூட்டணியாக இருக்கலாம். ரஜினியை, அதிமுகவைப் பிடித்துக் கொண்டு தமிழகத்திற்குள் பாஜக காலடி எடுத்து வைக்க முயற்சிக்கும். அதற்கான திட்டங்களில் ஏற்கனவே இறங்கிவிட்டது. பாஜகவுக்கு அனைத்து மாநிலங்களிலும் முன் கூட்டியே ஸ்கெட்ச் கொண்டு வந்துதான் செயல்பட்டு வருகிறது. இதுதான் அந்தக் கட்சிக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது.
இந்தவகையில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் தோல்வியாக கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட முரண்பாடுகளைக் கூறலாம். சரியான திட்டமிடல் இல்லை. மோடி அரசின் குறைகளை சரியாக எடுத்து வைக்கவில்லை. சுயநல அரசியலை சிந்தித்ததின் வெளிபாடுதான் தோல்வியில் முடிந்துள்ளது. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இதையே வரும் தேர்தல்களிலும் பாஜக பின்பற்றும். தமிழகத்திற்கான திட்டமும் தயாராகி வருகிறது. தமிழகத்தில் பாஜக நினைப்பதைப் போல அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது என்பதைத் தான் கடந்த கால தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தமிழகத்தில் பாஜகவின் நடவடிக்கைகளைப் பொறுத்தே அதற்கான வரவேற்பும் இருக்கும். ஆனாலும், கடந்த கால கசப்பான பல நினைவுகளை மக்கள் மறப்பார்களா என்பதும் சந்தேகம்தான்.
பாஜக திட்டமிட்டு அடிமட்டத்தில் இருந்து எப்படி பணியாற்றுகிறதோ அதுபோல் தான் எதிர்க்கட்சிகளும் எதிர்காலத்தில் பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் வெற்றிக் கனி பறிப்பது கடினம்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசிய அவர், வாஜ்பாய்க்குப் பின் தேசியளவில் செல்வாக்கு பெற்ற தலைவராக மோடி இருக்கிறார். தேசியளவில் நேரு, இந்திரா போலவும், தமிழகத்தில் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர், ஜெயலலிதா போல மக்களை ஈர்க்கக்கூடிய தலைவராக மோடி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடிக்காக கிடைத்த வெற்றி.
தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. அதனால் தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. ஒருமுறை ஆதரவு அலை அல்லது எதிர்ப்பு அலை வீசிவிட்டால் அதை மாற்றுவது கடினம். மோடியின் எதிர்ப்பலையால் தமிழகத்தில் மற்றவர்கள் வென்றுள்ளனர். நீட், மீத்தேன், கெயில் எரிவாயுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளின் சூறாவளி பிரச்சாரம் தான் தமிழகத்தில் பாஜகவின் தோல்விக்கு காரணம்.
கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிகளை இணைக்க நடவடிக்கைக் எடுக்கப்படும் என நிதின் கட்கரி கூறியது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் பாஜக தோல்வி அடைந்த பிறகும், நிதின் கட்கரி நதிகளை இணைப்பதை குறித்து பேசியது பாராட்டுக்குரியது. இது விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.
புதியதாக கட்சி ஆரம்பித்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள். காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை ராகுல் கைவிட வேண்டும். காங்கிரஸில் மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களை கையாள்வதில் ராகுலுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சி எவ்வளவு முக்கியமோ, அதேபோல எதிர்க்கட்சியும் மிகவும் முக்கியம். பாஜக-வின் அழைப்பை ஏற்று மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறேன். என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மோடி வெற்றிக்கு கருத்து தெரிவித்த ரஜினிக்கு சீமான் அறிவுரை குறித்து தற்போழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மக்களுக்காக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத நடிகர்கள் அரசியலில் குறிப்பதற்கான காரணம் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் திரைப்படத்தின் மீதும் அதில் நடிக்கக்கூடிய கதாநாயகர்கள் மீதுமான கவர்ச்சி தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது.
ஆகையால் கட்சி தொடங்கிய உடன் ஏராளமான மக்கள் நடிகர்களின் பின் சென்று ஏமாந்துவிடுகிறார்கள். இதனால் மக்களுக்காக போராட கூடிய அரசியல் தலைவர்கள் மக்களால் திரும்பி பார்க்கப்படுவதில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சி தொடங்கிய உடன் கருத்து கூறுவேன் என்று கூறிய ரஜினி மோடியின் வெற்றிக்கு கருத்து பதிவு செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன் மக்களவைத் தேர்தல் நேர்மையுடன் தான் நடைபெற்றதா? என்று சிந்தித்துப் பாருங்கள் என்று ரஜினிக்கு சீமான் அறிவுரை கூறியுள்ளார்.
தமிழகத்தில் எம்ஜிஆர் போல் நடிகர் ரஜினி உருவாக வாய்ப்பு உள்ளதா என்ற தலைப்பில் இணையதளம் ஒன்று நடத்திய பேஸ்புக் கருத்துக்கணிப்பில் ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் வந்துள்ளது.
துக்ளக் பத்தரிகை ஆசிரியரும், பாஜக ஆதரவாளருமான குருமூர்த்தி அண்மையில் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அப்போது மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் போலவே ஆன்மீகத்திலும், தேசியத்திலும் நடிகர் ரஜனிகாந்த் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார். மேலும், எம்.ஜி.ஆர் போலவே தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த உருவெடுப்பார் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், செய்தி இணைய தளம், தனது பேஸ்புக் பக்கம் வாயிலாக நேரலை கருத்துக்கணிப்பு நடத்தியது. ‘துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியபடி, தமிழகத்தில் எம்ஜிஆர் போல் நடிகர் ரஜினி உருவாக வாய்ப்பு உள்ளதா?’என்ற தலைப்பில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவில், 70.9% மக்கள் ரஜினி தான் அடுத்த எம்.ஜி.ஆர் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். 29.07 சதவீதம் பேர் ரஜினியின் அரசியலுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மக்கள், சாதி மத பேதமற்ற அரசியலை தலைவர் ரஜினிகாந்த் ஒருவரால் மட்டுமே கொடுக்க முடியும். ஆன்மீக அரசியலுக்கு ஜாதி, மதம் ,இனம் இல்லை! நல்ல மனதிற்கு மட்டுமே இடம். மத்தியில் மோடி பார்த்து கொள்வார். தமிழ்நாட்டை பொறுத்த வரை ரஜினியால் மட்டுமே முடியும். குடும்ப அரசியல் நடத்தும் திமுகவால் அது முடியாது. எம்ஜிஆர் அவர்களின் வெற்றி இடத்தை ரஜினிகாந்த் அவர்கள் தான் நிரப்பமுடியும். எம்ஜிஆராக உருவெடுப்பாரா என்று தெரியாது… காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் எப்படியும் ரஜினிகாந்தை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று பாஜகவினர் முயற்சித்தாலும், ரஜினிகாந்த்தை தனியாக இயங்க விடமாட்டார்கள், ரஜினிகாந்த் மீது தங்களது ஆளுமையை திணிப்பார்கள் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. மேலும், அவரை பாஜகவின் மறுஉருவமாகவே தமிழகத்தில் பலரும் பார்த்து வருகின்றனர். தமிழகத்தின் எதிர்காலம் யார் கையில் என்பதை நடக்கவிருக்கும் சம்பவங்கள்தான் தீர்மானிக்குமே தவிர முக அடையாளம் கிடையாது என்று ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.