ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு..!
தமிழகத்தில் கடந்த மாதம் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் பாலின் கொள்முதல் விலையை அதிகரித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் உத்தரவிட்டுள்ளது.
பால் முகவர்களின் கோரிக்கையை ஏற்று, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.32லிருந்து, ரூ.35ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேப்போல் எருமைப்பால் கொள்முதல் விலை 41ல் இருந்து 45க்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை ஈடுகட்டும் வகையில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு ரூ.60ஆக மாற்றி அமைத்துள்ளது.
இதையடுத்து பால் விலை உயர்த்தப்பட்டதாக பல்வேறு தரப்பிலிருந்து விமர்ச்சனம் எழுந்த நிலையில் இதுதொடர்பாக ஆவின் கொடுத்துள்ள விளக்கத்தில் ஆரஞ்ச் பால் பாக்கெடுக்கான மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.46-க்கே விற்கப்படும் என தெளிவுப்படுத்தியுள்ளது. அதேவேளையில் சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு 60 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது தனியார் பாலின் விலையை ஒப்பிடும் போது ஆரஞ்ச் அட்டைதாரர்களுக்கான பால் லிட்டருக்கு ரூ.24 குறைவு, அதேபோல் சில்லறை விலையில் ஒப்பிடும்போது ரூ. 10 குறைவு என விளக்கமளித்துள்ளது.
இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk,, நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும். தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கே புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60 ஆக 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
– சதீஸ்