அரசியல்

மது ஒழிப்பு மாநாடு..! அதிமுகவிற்கு அழைப்பு.. திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா விசிக..?

கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி மகளிர் சார்பில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருக்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்க `அதிமுக’ விற்கு அழைப்பு விடுத்திருகிறார் விசிக தலைவர் திருமாவளவன். இது ‘விசிக’வின் தேர்தல் அரசியலுக்கான யுக்தியா? மக்களுக்கான நலனா? என்பது அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

இதுகுறித்து பேசியிருக்கும் ‘விசிக’ தலைவர் திருமாவளவன், “இந்த மது ஒழிப்பு மாநாடு தேர்தலை குறிவைக்கும் யுக்தியல்ல. இது தேர்தலுக்கான மாநாடு அல்ல, மக்களுக்கான மாநாடு. அதிமுக இந்த மாநாட்டில் தாராளமாகப் பங்கேற்கலாம். மதவாத – சாதியவாத சக்திகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் எங்களுக்குத் துணை நின்று இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறோம். காரணம்; மது போதையை விடக் கொடியது மதவாத, சாதிய போதை.

மதவாத – சாதியக் கட்சியைத் தவிர, மற்ற எல்லா ஜனநாயகக் கட்சிகளும் மதுவை ஒழிக்க ஒரே மேடையில் கைகோர்த்து நிற்கவேண்டும். தேர்தல் அரசியல் வேறு, மக்களுக்கான அரசியல் வேறு. மக்களுக்காக எல்லோரும் ஒன்றாக நிற்க வேண்டும், தேர்தல் களத்தில் யாருடன் நிற்க வேண்டும் என்பதை தேர்தல் சமயத்தில்தான் முடிவெடுக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

இதுகுறித்துப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ‘அதிமுக’ வின் அமைச்சர்கள் இதுகுறித்து தலைமைதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அதிமுகவை அழைப்பது, எந்தக் கட்சியையும் அழைப்பது என்பது ‘விசிக’வின் முடிவு. அழைப்பை ஏற்றுச் செல்ல வேண்டுமா என்பதை அந்தந்தக் கட்சியினர் முடிவெடுப்பார்கள். அதில் வேறு யாரும் கருத்துச் சொல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 11 பேரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குவதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கள்ளக்குறிச்சி கருணாபுரத்திற்கு வந்திருந்தார். 11 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கியவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை தங்களுடைய தற்போதைய வாழ்வாதாரம் குறித்தும், மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பேசவைத்தார்.

அதையடுத்துப் பேசிய திருமாவளவன், “மது ஒழிப்பின் அவசியம் என்ன என்பதை கருணாபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரல் உணர்த்துகிறது. எனவே தென் மாவட்டம் மற்றும் வடமாவட்டங்களில் இருந்து வருபவர்கள், எளிதாக கலந்து கொள்ளும் வகையில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அதன்படி அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மாநாடு நடைபெறும்.

தற்போது இங்கு பேசிய பலரின் அழுகுரல் கண்கலங்கச் செய்கிறது. பள்ளிக்குச் செல்லும் 12 வயது சிறுவன் முதல் அனைவரும் மது அருந்துவதாக இங்கு வந்திருந்த தாய்மார்கள் கண்ணீர் மல்க கூறினர். இதனால் இளைஞர்களின் சக்தியை இந்தியா இழக்கிறது.

இங்கு பேசிய பலரும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்கின்றனர். எனவே தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கிறது. இந்த மாநாட்டில் கருணாபுரத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளவேண்டும். இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடவில்லை. தேர்தல் காலத்தில்தான் தேர்தல் குறித்து முடிவெடுக்க வேண்டும். கூட்டணி என்பது வேறு, அரசியல் என்பது வேறு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை பல்வேறு தரப்பினரும் கூட்டணியோடு முடிச்சு போடுகிறார்கள். விவாதிக்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து பேசவேண்டும். தற்போது மக்களுக்கான பிரச்னை எனும்போது, அதற்காக குரல் கொடுக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தில் 47-வது ஷரத்தில் மதுவிலக்கு குறித்து அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது தேசிய அளவிலான பிரச்னை. எனவே தேசிய அளவில் மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்பதை மத்திய பா.ஜ.க அரசுக்கும் வலியுறுத்துகிறோம். இந்த மாநாடு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் கோரிக்கை மாநாடு. எனவே இந்த மாநாட்டில் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் தி.மு.க, மது விலக்கில் எங்கள் நிலைப்பாடு கொண்ட அ.தி.மு.க-வும் பங்கேற்கலாம்” என்றார்.

அதையடுத்து `ஜனநாயக சக்திகள் அனைவரும் மது விலக்கு ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாம் என தெரிவித்தீர்கள். அந்த வகையில், மது விலக்கு ஒழிப்பில் தீவிரம் காட்டும் பா.ம.க-விற்கும் நீங்கள் அழைப்பு விடுத்திருப்பதாக கருதலாமா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த திருமாவளவன், “பா.ம.க-வும், பா.ஜ.க-வும் மதவாத சக்திகளாக இருப்பதால் அவர்களுக்கு அழைப்பில்லை. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் பங்கேற்கலாம்” என்றார்.

முன்னதாக விழுப்புரத்தில் பேசிய அவர், “கட்சி என்பது வேறு. அரசியல் என்பது வேறு. 24 மணி நேரமும் கட்சி அரசியல் சார்ந்து இருக்க முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியலைப் பார்த்து, மற்ற நேரங்களில் மக்களின் நலன்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தி.மு.க-வின் நிலைப்பாடும் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதுதான். அ.தி.மு.க மற்றும் இடதுசாரிகளுக்கும் அதே நிலைப்பாடுதான். நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும், இதற்கும் முடிச்சிப் போட தேவையில்லை. மது விலக்கை அமல்படுத்துவோம் என்று 2016 தேர்தல் அறிக்கையில் தி.மு.க வெளிப்படையாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது. தற்போது அதை நினைவூட்டுகிறோம். மற்றபடி கூட்டணியை விட்டு நாங்கள் தாவவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கியிருக்கும் நடிகர் விஜய்யும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button