“தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் விமர்சனம்

கே.ஆர் குரூப் நிறுவனம் சார்பில், கண்ணன் ரவி தயாரிப்பில், ஜீவா, இளவரசு, தம்பிராமையா, பிரார்த்தனா , ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் நடிப்பில், நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தலைவர் தம்பி தலைமையில்”.
கதைப்படி.. கிராம பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஜீவரத்தினம் ( ஜீவா ) அந்த ஊரில் மறுநாள் காலையில் நடைபெற இருக்கும் இளவரசுவின் மகள் திருமண ஏற்பாடுகளை கவணிக்க அங்கு செல்கிறார். கல்யாண வேலைகள் மும்முரமாக நடைபெறுகிறது. அனைத்து வேலையையும் கூட இருந்து முடித்துக்கொடு ஜீவா என பொறுப்புகளை ஒப்படைக்கிறார் இளவரசு. ஆட்டம், பாட்டு என ஒரே களகளப்பாக இருக்கிறது திருமண வீடு. இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணியின் ( தம்பிராமையா ) தந்தை இறந்து போகிறார். இந்த இரண்டு வீட்டிற்கும் ஏற்கனவே இருந்துவந்த பகையால், திருமணம் நடைபெறும் அதே நேரத்தில் தனது தந்தையின் உடலை உற்றார் உறவினரோடு எடுத்துச்செல்ல வேண்டும் என்கிறார் மணி.

ஒரே நேரத்தில் திருமணம், சாவு ஊர்வலம் இரண்டையும் எப்படி நடத்துவது ? என்கிற குழப்பத்தோடு, இருவரையும் சமாதானம் செய்ய முயற்சிக்கிறார் பஞ்சாயத்து தலைவர் ஜீவா. அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை…
அன்றாட அவரவர் வசிக்கும் பகுதிகளில் நிகழும் எதார்த்தமான சம்பவங்களை நகைச்சுவை, காதல், நட்பு, பாசம் கலந்த பொழுதுபோக்கு படைப்பாக திரைக்கதை அமைத்த இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ரீ எண்ட்ரி கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு, தனது இருப்பையும் தக்க வைத்துள்ளார் நடிகர் ஜீவா.

படத்திற்கு உயிரோட்டமே இளவரசு கதாப்பாத்திரம் தான். அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் இளவரசு.
அதேபோல் தம்பிராமையா, பிரார்த்தனா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களுக்கும் கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.




