அமமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா சிறையில் இருந்து வந்ததும் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் அமமுக என்ற அமைப்பைத் தொடங்கினார். சசிகலா கட்சியின் பொதுச் செயலாளர் என்றும், டிடிவி தினகரன் துணைப்பொதுச் செயலாளர் என்றும் அறிவிக்கப்பட்டது. நாங்கள் தனி கட்சி கிடையாது. அதிமுகவின் ஒரு பிரிவு. இரட்டை இலை சின்னம், அதிமுகவை கைப்பற்றுவதே எங்கள் நோக்கம் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
மேலும் அதிமுக மீது உரிமை கோரி வந்ததால் அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அமமுகவுக்கு சின்னம் பெறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. அமமுக பதிவு செய்யப்படாத அமைப்பு என்பதால் பொதுவான சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர் மக்களவை, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் பரிசு பெட்டி சின்னம் பொது சின்னமாக வழங்கப்பட்டது.
அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அமமுகவுக்கு பொதுவான சின்னம் தேவை என்றால், கட்சியை பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சசிகலா சிறையில் இருந்து வந்ததும், கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும் வழக்கை சசிகலா தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அமமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விரைவில் கட்சியாக பதிவு செய்யப்படுகிறது. கட்சியாக பதிவு செய்யப்பட்ட பிறகு, சசிகலா தலைவராக இருப்பார். பொதுக்குழு கூடி கட்சிக்கான துணை தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
சசிகலாவின் ஆலோசனை படி தான் அமமுக-வில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
செய்தியாளர்கள் எஞ்சியுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அமமுக-வில் அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.