பழனியில் தொடரும்.. கஞ்சா விற்பனை ! இளைஞர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. ஆனால் சமீபகாலமாக போதைப்பொருள் விற்பனை, மணல் திருட்டு, தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையிலும் சிறந்த நகரமாகி வருவதாக ஏற்கனவே செய்திகளை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் பழனி நகர காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பழனி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறத்தில் சந்தேகத்திற்குரிய நபர்கள் ஆறு பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். அவர்களை அழைத்து விசாரணை செய்ததில் அவர்களிடம் கஞ்சா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை உறுதி செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இது சம்பந்தமான விசாரணையில், சிவகிரி பட்டியை சேர்ந்த பிரபு, ஏசிசி சாலையை சேர்ந்த பரத்ராஜ், கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ஹரி பிரசாத், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முக கரியா, திலகர் வீதியைச் சேர்ந்த கோகுல், தெற்கு அண்ணா நகரை சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பழனி நகர பகுதியில் போதை பொருட்களான குட்கா, கஞ்சா விற்பனையை தடுத்தவும், போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக நகர காவல்துறையினர் தெரிவித்தாலும், காவல் நிலையங்களில் பணிபுரியும் ஒருசில காவலர்கள் துணையோடு போதைப்பொருள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனையிலும் வேதனை என்கிறார்கள் அப்பகுதியினர்.
– கா.சாதிக்பாட்ஷா,



