அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராம மக்கள்

பரமக்குடி அருகே தோளூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, கிராம மக்கள் கல்வி சீர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட தோளூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் எண்ணிக்கை இருந்த நிலையில், தற்போது வெகுவாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இப்பள்ளியில் இன்று இரண்டாம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தும் வகையிலும், பள்ளியை மேம்படுத்தும் வகையிலும் தோளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கு தேவையான கணினி, மேஜைகள், எழுது பொருட்கள் இருக்கைகள் உள்ளிட்டவற்றை கல்வி சீராக வழங்கி உள்ளனர். கல்விச்சீர் கொண்டு வந்த கிராம மக்களுக்கு பள்ளியின் சார்பில் ஆராத்தி எடுத்து வரவேற்கப்பட்டது. ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கல்வி சீராக வழங்கி கிராம மக்கள் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
—–