பிரேத பரிசோதனை செய்ய, உயிருடன் இருக்கும் போதே கோரிக்கை மனு ! பல்லடம் அரசு மருத்துவமனையின் அவலநிலை !

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாலுக்காக்களில் முக்கியமாக கருதப்படுவது பல்லடம். விசைத்தறி, கோழிப்பண்ணை, விவசாயம், ஜவுளி தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், கிழக்கு மாவட்டங்களுக்கும் செல்லும் பிரதான வழித்தடமாகவும் பல்லடம் விளங்குகிறது.
இந்நிலையில் இங்கு வசிக்கும் ஏழை தொழிலாளர்களுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பல்லடம் அரசு மருத்துவமனை தான் அருகில் உள்ள மருத்துவமனை. ஆனால் பெரும்பாலும் இங்கு விபத்தில் சிக்கியோ, உயிருக்கு போராடியோ சிகிச்சை பெற வரும் நோயாளிகள் முதலுதவி மட்டுமே அளிக்கப்பட்டு திருப்பூருக்கோ, கோவைக்கோ கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் இதைவிட கொடுமை இங்கு இறந்துவிடும் நோயாளிகளின் உடலை ஒரீரு நாட்கள் வைத்திருந்து பிரேத பரிசோதனை செய்யாமல் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகின்றனர். இதனால் உடலை கொண்டு செல்லும் செலவு முதற்கொண்டு பிற செலவுகளும் அதிகமாவதோடு, இறந்து இரண்டு நாட்கள் கழித்து உடலை பெற்றுச்செல்லும் அவலம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் பல்லடத்தில் போதிய மருத்துவர்களை பணியமர்த்தி, உடல்களை பல்லடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் ஏராளமானோர் உயிருடன் இருக்கும் போதே, தாங்கள் இறந்த பிறகு பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டி பல்லடம் வட்டாட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.