டி.வி. சேனல் குறித்து விமர்சனம் செய்த நடிகர் விஷாலுக்கு அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என 2 முக்கிய சங்கங்களிலும் தலைமை பொறுப்பில் இருப்பவர் நடிகர் விஷால்.
சில ஆண்டுகளாகவே நடிகர் விஷால் அரசியலுக்கு வருவார் என்று செய்திகள் வெளியாகின. ரஜினியும் கமலும் கட்சி தொடங்குவதற்கு முன்பே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அரசியலுக்குள் நுழைந்தார்.
ஆனால் கடைசி நேர குளறுபடிகளால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாதபடி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.வினரே காரணம் என்று சொல்லப்பட்டதால் விஷாலுக்கும் அ.தி.மு.கவுக்குமான பனிப்போர் தொடங்கியது.
இந்தநிலையில் அ.தி.மு.க.வுக்கு சொந்தமாக நியூஸ் ஜெ என்ற செய்தி சேனல் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. அப்போது டுவிட்டரில் விஷால் வெளியிட்ட ஒரு பதிவு, அ.தி.மு.க.வைச் சீண்டுவதுபோல அமைந்தது.
அவர் வெளியிட்டு இருந்த பதிவில், “மற்றுமொரு செய்திச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாதச்சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019-ம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். இது அ.தி.மு.க.வினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
விஷாலின் பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு விவாதத்தையும் உண்டாக்கியது. அவரது பதிவுக்கு கீழேயே பலர் கமெண்டுகளில் ‘அ.தி.மு.க.வை மட்டும் விஷால் சீண்டுவது ஏன்? மற்ற கட்சியினர் வைத்திருக்கும் சேனல்களுக்கும் கணக்கு கேட்பீர்களா?’ என்ற ரீதியில் கேள்விகள் கேட்க தொடங்கினார்.
விஷால் தனது பதிவு பற்றி கூறும்போது ‘நான் இந்த அரசாங்கத்துக்கு வரி கட்டுபவன். எனக்கு கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறது. ஒரு சேனல் நடத்த ஆண்டுக்கு ரூ.30 கோடி வரை செலவாகும். அவர்களுக்கு எங்கிருந்து இந்த பணம் வருகிறது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விஷால் கருத்துக்கு இன்று வெளியான அ.தி.மு.க நாளேடான நமது அம்மா கண்டனம் தெரிவித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘நியூஸ் ஜெ’ தமிழ்ச் செய்தி தொலைக்காட்சிக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிகிற வேளையில், ஒரு ‘விஷமப்பயல்’ மட்டும் வாழ்த்துக்கு பதிலாக வன்மத்தை கக்குகிறது. காசு ஏது என்று காழ்ப்புணர்ச்சி பேசுகிறது.
இப்ப மட்டுமா?… வெகு நாளாகவே குறிப்பாக அம்மாவின் மறைவுக்குப் பிறகு துரோகியின் தூண்டுதலின் பேரில், கழகத்தை தொடர்ந்து பழிக்கிற துஷ்டனாகிவிட்ட “அந்த தோல்விப்பட நடிகர்” கணக்கு கேட்க வேண்டிய இடம், “63 லட்சம் ரூபாய் சொத்து கணக்கு காட்டிவிட்டு, தொலைக்காட்சி, பத்திரிகை நடத்துவதோடு, டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றியும், ஊரெங்கும் கூட்டம் நடத்துகிறேன் என்று மாதம் 10 கோடி ரூபாயை செலவு செய்யும் அந்த மாபியா தலைவனிடம் தானே…”
அதைவிடுத்து, ஏறத்தாழ 2 கோடி தொண்டர்களை கொண்ட இமயப் பேரியக்கத்திடம்… ஆறாம் முறையாய் தமிழகத்தை ஆட்சி செய்யும் கழகத்திடம்… தொலைக்காட்சி தொடங்க பணம் ஏது என்று டுவிட்டரிலே, பதிவு போட்டு தனது நமைச்சலை வெளிப்படுத்துவது வெட்கக்கேடல்லவா?…
சரி அதெல்லாம் போகட்டும்… நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 7 கோடி ரூபாயை காணோம்னு கோடம்பாக்கமே உன்னை கொலை வெறியில் தேடுகிறபோது, உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை…
போ… போ… வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு….
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.