மாவட்டம்

கோவையில் கார்களை திருடியவர்களே, கண்டுபிடித்து தருவதாக நூதன மோசடி !

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த கார்களை வாடகைக்கு எடுத்து கோவை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடமானம் வைத்து ஏமாற்றியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம், கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த K.H நவாஸ் என்பவர் கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில், தனக்கு சொந்தமான KQ 45 X 5136 என்ற பதிவு எண் கொண்ட சிவப்பு கலர் மாருதி பீரிசா கார் மற்றும் KL 17R 7912 என்ற பதிவு எண் கொண்ட வெள்ளை கலர் மாருதி பலினோ கார் மற்றும் KL 47 K 7006 சிகப்பு கலர் மகேந்திரா தார் காரில் நவாசும் அவரது குடும்பத்தினருடன் கோவைக்கு வந்து கோவை குற்றாலம், ஈஷா யோகா மையம் போன்ற பகுதிகளுக்கு சென்று விட்டு செல்வபுரம் சிவாலாய சந்திப்பு ஐடியல் பேக்கரி அருகில் நிறுத்தப்பட்ட கார் திருட்டு போய் விட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசாரணை மேற்கொண்ட போது கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல், தமிழ்நாடு கோவையை சேர்ந்த கும்பலுடன் சேர்ந்து திட்டமிட்டு திருட்டு குற்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டதில் கரும்புகடையை சேர்ந்த முகமது யாசீர், அசாருதீன், முகமது யூசுப், ஜான்சுந்தர் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அப்பாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசாரின் தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கில் கைதான நபர்களுடன், மேலும் சிலபேர் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

கேரளாவில் இயங்கி வரும் கும்பலில் உள்ளவர்கள் அங்கு இருக்கும் சொகுசு கார்களை அதன் உரிமையாளர்களிடம் இருந்து வாடகைக்கு எடுத்து வந்து, அவர்களுக்கு தெரியாமல் கோவைக்கு வந்து கரும்புகடையில் உள்ள ரியாசுதீன் மற்றும் தௌபீக் என்பவர்களிடம் அடமானம் வைத்து பணம் பெற்று கொள்வதும், அந்த கார்களில் உள்ள GPS கருவியை துண்டித்து அகற்றியும், வாகனத்தின் நெம்பர் பிளேட்டையும் கழட்டி எடுத்து அதற்கு பதிலாக யாரும் கண்டுபிடிக்க முடியாத படி குற்றவாளிகள் புதியதாக GPS யை பொருத்தியுள்ளனர். எதிரிகளின் கூட்டாளி ஜான்சுந்தர் என்பவரது ஒர்க் ஷாப்பில் வைத்து புதியதாக பெயிண்டிங் செய்து கலரை மாற்றி காரை விற்கும் தொழில் செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மேலும் விற்ற கார்களில் பொருத்தி உள்ள GPS யை கருவியை கொள்ளையர்கள் TB Track என்ற செல்போன் செயலி மூலம் கார்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்து உள்ளனர். பின்னர் காரின் உண்மையான உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்து, காணாமல் போன உங்களது கார் எங்கு உள்ளது என்பது எங்களுக்கு தெரியும் நேரில் வந்தால் உங்களுக்கு உதவுவதாக கூறி வரவழைத்துள்ளனர். பின்னர் அவர்களை மிரட்டி பணம் பெற்று கொண்டு கார் இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு நூதன முறையில் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது.

இவ்வழக்கில் அப்பாஸ், கரும்புகடையை சேர்ந்த ரியாசுதீன், முகமது வஹாப் என்ற தௌபீக் ஆகியோரை கைது செய்ததோடு,  கொள்ளையர்கள் திருடிய மூன்று கார்களையும் மீட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button