அரசு பணிகளுடன் தேர்தல் பணிகளை அமைச்சர்கள் ஒருங்கிணைக்க கூடாது!: இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி, மத்தியிலும்- மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சியினர் தங்கள் அலுவலக அதிகாரத்தை தேர்தல் பணிகளுக்காக பயன்டுத்துவது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்த வகையிலும் இடம் அளிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் தங்கள் அலுவலக ரீதியிலான பார்வையிடலையும், தேர்தல் பணிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் மேற்கொள்ளக்கூடாது, அரசு இயந்திரத்தையும் ஊழியர்களையும் தங்களது தேர்தல் பணிக்காக பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்தும் திடல்கள் போன்ற பொது இடங்கள், ஹெலிபேடு தளம் போன்றவைகளை ஆளும் கட்சியினர் மட்டும் பயன்படுத்த கூடாது, மற்ற கட்சியினரும் வேட்பாளர்களும் கேட்கும் போது அவர்களுக்கும் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அரசு விருந்தினர் மாளிகை, ஓய்வு இல்லங்கள், மற்றும் பிற தங்கும் இடங்களை ஆளும் கட்சியினர் அதன் வேட்பாளர்கள் மட்டுமே பயன்படுத்துவது கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
பிற கட்சிகளும், வேட்பாளர்களும், முறையாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் எந்த ஒரு கட்சியும், வேட்பாளரும் அவற்றை தேர்தல் அலுவலகமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர்களும், அதிகாரிகளும் எந்த வடிவத்திலும் நிதியோ, வாக்குறுதிகளையோ வழங்க கூடாது என்றும், எந்த ஒரு திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டக் கூடாது என்றும் சாலை அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்த வாக்குறுதிகளை அளிக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதேபோல் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில்2019 ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலும்,18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் தொடர்பான ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சில வழக்குகள் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் வழக்குகள் தாக்கல் செய்வதன் மூலம் ஒரே தன்மையுடைய வழக்குகளில் இரு வேறு தீர்ப்புகள் வெளியாவதை தடுக்கவும், ஒரே கோரிக்கைக்கு இரு நீதிமன்றங்களிலும் வழக்குகள் தாக்கல் செய்வதை தடுக்கவும் கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரதான அமர்வான சென்னையில் மட்டுமே விசாரிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
அந்த வகையில் 2011 உத்தரவு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில்ரமானி அமர்வின் கவனத்துக்கு கொண்டுவரபட்டது. இதை பரிசீலினை செய்த தலைமை நீதிபதி, 2019 மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சென்னையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரிக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.