சினிமா

ஸ்ரீ வித்யா ( 19.10 2006 ) நினைவு தினம் ! அவரது வழக்கறிஞரின் நினைவலைகள் !

சின்னஞ்சிறுமியாக அம்மா எம்.எல்.வி.பாட கூத்தனூர் சரஸ்வதி அம்மன் சன்னதியில் அவர் நடனமாடியது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. அப்போதே முகத்தில் பாதியளவு கண்கள் தான்.. அந்தப் பெரிய கண்களில் தான் எத்தனை எக்ஸ்பிரஷன்ஸ்..!.
பேசும் விழிகள் ஸ்ரீ வித்யாவிற்கு.
தமிழ்த் திரை உலகம் அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை. அம்மாவாகத் தான் பார்த்தது. ஒருவேளை தன் 22 வயதிலேயே 20 வயதுப் பெண்ணிற்கு அம்மாவாக ( அபூர்வ ராகங்கள் ) நடித்ததால் இருக்கவாம்.

மலையாள சினிமா அவரை அற்புதமாகப் பயன் படுத்திக் கொண்டது.
226 படங்கள் நடித்திருக்கிறார். நான் மலையாளப் படங்களின் ரசிகை ஆனது ஸ்ரீ வித்யாவின் “ரஸனா” படம் பார்த்த பிறகு தான். அருமையான திரைப்படம். அதே போன்ற படங்கள் தமிழில் சாத்தியம் இல்லை. படத்தின் கதை என்று எடுத்துக் கொண்டால் பரத்கோபியின் மனைவி ஶ்ரீவித்யா. பரத்கோபி ஒரு எழுத்தாளர்
ஸ்ரீ வித்யா ஒரு அரசு அலுவலகத்தில் சூப்பர்வைசராக வேலை பார்ப்பார். அங்கே வேலை செய்யும் நெடுமுடி வேணு ஒரு அப்பாவி. அவனைப் பற்றி ஶ்ரீவித்யா தனது கணவனிடம் சொல்கிறார். பரத்கோபிக்கு, வேணு கேரக்டரை வைத்து கதை எழுதும் யோசனை வர, “வேணு ஒரு இன்ட்ரஸ்ட்டிங்கான கேரக்டர். நாளைலருந்து அவன்கிட்ட கொஞ்சம் நெருக்கமா, ஃப்ரண்ட்லியா பழகுற மாதிரி நடி. அவன் எப்படி ரீயாக்ட் செய்வான்னு பாக்கணும்…” என்கிறார் சிறிது தயக்கத்திற்கு பிறகு ஶ்ரீவித்யா நெடுமுடி வேணுவிடம் நெருங்கிப் பழகுவது போல் நடிக்கிறார். ஶ்ரீவித்யா மேல் காதலாகிறார் வேணு. வேணுவின் நண்பர் மம்முட்டி வேணுவின் ஆசையை மேலும் தூண்டிவிடுகிறார். ஶ்ரீவித்யா வேணுவுடன் ஹோட்டலுக்கு காபி அருந்தவும், சினிமா பார்க்கவும் செல்கிறார்.
சில நாட்களுக்குப் பிறகு ஶ்ரீவித்யா வேணுவிடம், தனது கணவன் ஊரிலில்லை என்று கூறி அவனை உணவுண்ண வீட்டுக்கு அழைக்கிறார். அவனைப் படுக்கையறையில் அமரச் சொல்கிறார். வேணு ஶ்ரீவித்யாவை அணைக்கும் கனவுடன் அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு கணவனுடன் வரும் ஶ்ரீவித்யா தனது கணவனை அறிமுகப்படுத்துகிறார். அதிர்ச்சியடையும் வேணு, ஒரு வார்த்தையும் சொல்லாமல் இறங்கிச் செல்கிறார்.

ஶ்ரீவித்யா பரத்கோபியிடம் மிகவும் குற்ற உணர்வுடன் பேச… “வேணு ஒரு அற்புதமான கேரக்டர்” என்கிறார் பரத்கோபி. இன்னும் கொஞ்சம் அவனுடன் பழகுமாறு கூறுகிறார்‌. இதற்கு ஶ்ரீவித்யா மறுப்பு தெரிவிக்கிறார். வாழ்க்கையே வெறுத்துப்போன வேணு அலுவலகத்திற்கு வராமல் விரக்தியில் இருக்கிறார். பரத்கோபி, வேணுவை நேரில் சந்தித்து உண்மையைக் கூறுகிறார். அதன் பிறகு அலுவலகத்திற்கு வந்து ஶ்ரீவித்யாவை பார்க்கும் வேணு, ‘என் வாழ்வில் ஒரே பெண் நீங்கள் மட்டும்தான்” என்று கூறிவிட்டு வருகிறார். ஶ்ரீவித்யா வேதனையுடன் அழுகிறார். பின்னர் க்ளைமாக்ஸில் நெடுமுடி வேணு தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட… ஶ்ரீவித்யா மனநிலை சரியில்லாதவராகிறார்.
இந்தக் கதையில், தனது அற்புதமான நடிப்பால் ஶ்ரீவித்யா அசத்தியிருப்பார்.

இந்தக் கதைக்கு நடுத்தர வயதில், மிகவும் அழகான தோற்றமுடைய ஒரு பெண் வேண்டும். அதே சமயத்தில் அந்த அழகு, மிகவும் எளிய அழகாக இருக்கவேண்டும்
ஒரு அப்பாவி மனிதன் தைரியமாக காதலிக்கும் படி இருக்க வேண்டும்‌.
அதற்கு ஶ்ரீவித்யாவை விட்டால் வேறு யார் ?
இந்த திரைப்படத்தில், பல தனித்துவமான காட்சிகளில் ஶ்ரீவித்யா மிக அழகிய அபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அலுவலகத்தில் வேண்டுமென்றே வேணுவை உற்றுப் பார்த்துவிட்டு.‌. பிறகு வேணு அவரைப் பார்க்கும்போது ஒரு கேலிச்சிரிப்புடன் குனிந்துகொள்ளும் ஶ்ரீவித்யாவின் பார்வை… காபி அருந்த அழைத்துச் செல்லும்போது, வேணுவை பார்த்து உருவாகும் கேலிச்சிரிப்பை கைவிரலால் மூடி அடக்கியபடி பார்க்கும் பார்வை…… என்று படம் முழுவதும் விழிகளின் நடிப்பு தான்.. படத்தின் பிற்பகுதியில் தனது கணவனிடம், ‘மனைவியை வைத்து தருமன் சூதாடியது போல், ஒரு கதைக்காக நீங்கள் என்னைப் பணயம் வைத்து விளையாடிவிட்டீர்கள்” என்று ஆதங்கத்துடன் பேசும்போது ஶ்ரீவித்யாவின் கண்களில் தெரியும் சோகம்… ஒரு காவிய சோகம்.

இப்படத்தை பார்த்த பிறகு ஶ்ரீவித்யாவின் மலையாளப் படங்களை தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். ‘பவித்ரம் என்று ஒரு’ திரைப்படம் ஶ்ரீவித்யாவின் பெரிய மகனுக்கு திருமணமாகி குழந்தை இல்லாமல் இருக்கும். இரண்டாவது மகனுக்கு திருமணம் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், ஐம்பது வயதில் கர்ப்பமாகிவிடும் மனைவியாக ஶ்ரீவித்யா மிகச் சிறப்பாக நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக, தான் கர்ப்பமாக இருப்பதை மகன் அறிவதை உணரும்போது காண்பிக்கும் துக்கமும், வெட்கமும் கலந்த உணர்வுகளை அந்த மகத்தான விழிகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். ‘

பரதனின் ‘காட்டெத்தே கிளி கூடு…’ படத்தில் பரத்கோபியின் மனைவியாக நன்கு நடித்திருப்பார்.

தெய்வத்தின்ட விக்ருதிகள்” திரைப்படத்தில்,, ஆங்கிலோ இந்திய பெண்ணாக ஶ்ரீவித்யா நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் காட்டியிருப்பார்.

அக்டோபர் 20, 2006. வெள்ளிக்கிழமை. திருவனந்தபுரம், கரமனா பிராமண சமாஜத்தின் தகன மேடையில், நடிகை ஶ்ரீவித்யாவின் உடலுக்கு அவருடைய சகோதரர் சங்கரராமன் எரியூட்டுவதற்கு முன்பு, கேரள அரசின் சார்பில் 21 குண்டுகள் முழங்க ஶ்ரீவித்யா கௌரவிக்கப்பட்டார். முன்னதாக அப்போதைய கேரள முதல்வர் அச்சுதானந்தனும், அப்போதைய கேரள எதிர்கட்சித் தலைவர் உம்மன் சாண்டியும்  ஶ்ரீவித்யாவுக்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர். மலையாளிகள் ஒரு தமிழருக்கு செய்த மிகவும் அபூர்வமான மரியாதை அது. கேரள சகோதிரி பத்மினி அதே காலத்தில் காலமானார். அன்றைய தமிழக அரசு மரியாதை செய்யவில்லை.

– கே.எஸ். ராதாகிருஷ்ணன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button