அரசியல்தமிழகம்

கூலித்தொழிலாளர்களை குறிவைக்கும் லாட்டரிச் சீட்டு சூதாட்டம்… : துணைபோகிறதா ஆளும்கட்சியும், காவல்துறையும்..?

தமிழகம் முழுவதும் லாட்டரிச் சீட்டு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரளா போன்ற வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளும், மூன்றெழுத்து லாட்டரிச் சீட்டுகளும் ஏழை கூலித்தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்கிறார்கள். இந்த மூனாம் நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனையின் தலைமையிடமாக ஈரோடு மாவட்டம் திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் பெருந்துறை, பவானி, சித்தோடு, நசியனூர், சென்னிமலை போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய கூலித்தொழிலாளர்கள் பனியன் கம்பெனியில் வேலைசெய்வோர், விசைத்தறி கூடங்களில் வேலை செய்பவர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள்.

இந்தப் பகுதிகளில் இந்த மக்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்கும் பணத்தை பிடுங்குவதற்காக இந்த மூனாம் நம்பர் லாட்டரி என்கிற பெயரில் சில கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. கூலித் தொழிலாளர்களை ஆசை வார்த்தை கூறி மூனாம் நம்பர் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வர காரணமாக இருக்கிறார்கள். விசைத்தறி தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தில் முன்பணம் என்கிற பெயரில் கணிசமான தொகையை அட்வான்சாக பெற்றுக்கொண்டு பணக்காரர் ஆகும் ஆசையில் மூனாம் நம்பர் லாட்டரிச் சீட்டு சூதாட்டத்தில் சிக்கி தங்கள் பணத்தை இழக்கின்றனர்.

இதனால் தங்கள் குடும்பச் செலவுக்காக கந்துவட்டி, மீட்டர் வட்டி, வார வட்டிக்கு பணம் வாங்குகிறார்கள். வாரம் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வட்டி கட்டியே சிரமப்படுகிறார்கள். தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு சூதாட்டம் தடைசெய்யப்பட்டும், சில ஆளும் கட்சியினர் துணையோடு காவல்துறை உயர்அதிகாரிகள் முதல் கீழ்மட்டத்தினர் வரை மாதத்திற்கு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு மூனாம் நம்பர் லாட்டரிச் சீட்டு சூதாட்டத்தை அனுமதிப்பதாக அப்பகுதி மக்கள் புலம்புகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் பவானியில் அந்தியூர் பிரிவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பெயரைச் சொல்லி அதிமுகவைச் சார்ந்த M.G.நாத் (M.கோபிநாத்) என்பவர் ரோசா, தங்கம், விஷ்ணு போன்ற பெயர்களில் மூனாம் நம்பர் லாட்டரிச் சீட்டுகளும், கேரளா லாட்டரிச் சீட்டுகளும் விற்பனை செய்து வருகிறார். இவரது லாட்டரிச் சீட்டு விற்பனை நிலையம் அருகிலேயே துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மகளிர் காவல் நிலையம் இருக்கிறது. ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் விற்பனை செய்யும் மூனாம நம்பர் லாட்டரி சீட்டுகள் அனைத்தும் இவரது லாட்டரிச் சீட்டுகள் தானாம். அமைச்சர் கருப்பணனின் ஆல் இன் ஆல் என்று சொல்லிக்கொண்டு அதிமுக வேஷ்டியுடன் வியாபாரி தோரணையில் வயர்கடை வைத்துள்ளார். அதன் மாடியில் தான் தினசரி குலுக்கல், அதுவும் இவர் சொல்கிற நம்பர் தான் இருக்குமாம்.

மூனாம் நம்பர் லாட்டரிச் சீட்டு சூதாட்டத்தின் மூலம் வி.நி.நாத்திற்கு கிடைக்கும் தினசரி வருமானம் ஒன்றரை லட்சமாம். கூலித்தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி பணத்தை கொள்ளையடிக்கும் M.G.நாத் காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரையும் சரிசெய்து கொங்கு மண்டலத்தின் லாட்டரி மாபியாவாகவே செயல்பட்டு வருகிறார். லாட்டரி சூதாட்டத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பப் பெண்களின் கதறல் சத்தத்தால் 2003ல் ஜெயலலிதா லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு தடை விதித்தார். ஜெயலலிதாவால் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்பனை இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், பெருந்துறை பகுதியில் ஐந்து இடங்களிலும், நசியனூர் பகுதியில் மூன்று இடங்களிலும், சித்தோடு பகுதியில் பல இடங்களில் M.G.நாத்தின் மூனாம் நம்பர் லாட்டரிச் சீட்டுகள் படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பவானி பகுதியில் தன சண்முகமணி ஏஜென்டாக செயல்பட்ட மூனாம் நம்பர் லாட்டரியில் சீட்டு எழுதி அந்த நம்பருக்கு பரிசு விழுந்து பணம் கேட்டு வருபவர்களுக்கு பணம் தராமல் மறுத்ததால் பிரச்சனையாகி காவல்துறையினர் சமீபத்தில் தனசண்முகமணியின் சூதாட்ட அலுவலகங்களை மட்டும் மூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் லாட்டரி சூதாட்டத்தில் அரசியல்வாதிகள் முதல் காவல்துறையினர் வரை அனைவருக்கும் பங்கு இருப்பதாகவே தெரியவருகிறது. இவர்களின் ஆதரவு இல்லாமல் மூனாம் நம்பர் லாட்டரிச் சீட்டு சூதாட்டத்தை நடத்த முடியாது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள். அப்பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள், ஜெயலலிதாவால் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு சூதாட்டத்தை அம்மாவின் அரசு என்று அடிக்கடி கூறும் எடப்பாடி பழனிச்சாமி தடைசெய்து உத்தரவிட்டு அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு ? காத்திருப்போம்.

சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button