அரசியல்

கண்டுகொள்ளாத பாஜக&அதிமுக … : கிருஷ்ணசாமி புது முடிவு..!

திமுக ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர்கள் என்று அரசுப்பட்டியலில் பெயர் மாற்றம் செய்யபடும் என்று ஸ்டாலின் கூறியதை கிருஷ்ண சாமி வரவேற்றுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக பேசி, தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய தமிழகம் கட்சி, “எங்களை புறக்கணித்தால் அதிமுக கூட்டணி அதற்கான விலையை கொடுக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளது.
டாக்டர் கிருஷ்ண சாமி தலைமையிலான புதிய தமிழகம் இதுவரை தமிழகத்தில் திமுக, அதிமுக என்று மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக அக்கட்சி தனது நிலைப்பாடுகளை மாற்றியது.
குறிப்பாக நீட் உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவின் குரலாகவே அக்கட்சி பேசி வந்தது. வரும் தேர்தலிலும் பாஜக கூட்டணியில் அக்கட்சி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக – அதிமுக கூட்டணி ஏற்பட்டது. ஆனால், இந்தக்கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இருக்கிறதா? என்றே யாரும் மருந்துக்கு கூட கருத்து தெரிவிக்கவில்லை.
ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என்று பேசப்பட்ட நிலையில், இதுவரை அதிமுகவில் இருந்து யாரும் புதிய தமிழகம் கட்சியுடன் பேச முன்வரவில்லை. பாஜக சார்பிலும் புதிய தமிழகத்துக்கு சீட் கொடுக்க அதிமுகவுக்கு எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியின் அரசியல் ஆரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருஷ்ணசாமி, “எங்களை புறக்கணித்தால் அதிமுக கூட்டணி அதற்கான விலையை கொடுக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகவின் குரலாக இருந்தும் அவர்கள் தற்போது கண்டுகொள்ளாதது வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறினார். புதிய தமிழகம் இல்லாத அதிமுக கூட்டணி வெற்றிக்கூட்டணி இல்லை என்று தெரிவித்த அவர், 3 ஆண்டுகள் அதிமுக உடன் புதிய தமிழகம் தோழமையாக உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர்கள் என்று அரசுப்பட்டியலில் பெயர் மாற்றம் செய்யபடும் என்று ஸ்டாலின் கூறியதை கிருஷ்ண சாமி வரவேற்றுள்ளார்.
தேவேந்திர குல வேளாளர்கள் என்று அரசுப்பட்டியலில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும், எஸ்.சி பட்டியலில் இருந்து அந்த சமுதாயத்தை எம்.பி.சி பட்டியலுக்கு மாற்ற வேண்டும் போன்ற கிருஷ்ண சாமியின் கோரிக்கைக்கு மாநில அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. இதன் காரணமாக கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்துவருகிறது.
தேர்தல் கூட்டணி அமையாவிட்டால் புதிய தமிழகம் தலைமையில் சமுதாய அமைப்புகளை ஒன்றினைத்து 20 தொகுதிகளில் போட்டியிட கிருஷ்ண சாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆதிதிராவிடர் இனப்பிரிவுகளில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் ஆகிய 6 பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆதி திராவிடரில் 6 பிரிவிகளை இணைத்து தேவேந்திர குலவேளாளர் என பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சட்டத்துறையின் செயலாளர் ஆகியோரை உறுப்பினர்களாகவும், ஆதி திராவிடர் நல இயக்குநரை உறுப்பினர் – செயலராகவும் கொண்ட ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டியளித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தேவேந்திர குலவேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை எனவும், தேவேந்திர குலவேளாளர் என்பதை அறிவிக்க தமிழக அரசு தான் தயக்கம் காட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கிருஷ்ண சாமி நிலைப்பாடு தொடர்பாக பதிலளித்துள்ள பாஜக எம்.பி இல.கணேசன், கிருஷ்ணசாமி தன்னை தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து முன்னேறிய சமுதாயமாக மாறிவிட்டேன் என கூறுவது பாராட்டுக்குரியது தான் என தெரிவித்துள்ளார்.
மேலும், தேவேந்திரகுல வேளாளர் இனத்தை பட்டியலினத்தவர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்ற கிருஷ்ணசாமியின் கோரிக்கை வியப்பாக உள்ளது என்று தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button