சினிமா

இந்த விருது இந்தியப் பெண்களுக்கு சமர்ப்பணம்! : ஆஸ்கர் விருது குறித்து முருகானந்தம்

“கிராமப்புறப் பெண்கள் நாப்கின் பயன்படுத்த தடை செய்யும் குடும்பம். மூட நம்பிக்கைகள் இவற்றை எல்லாம் விவரிக்கிறது, இந்தக் குறும்படம். மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், நம் நாட்டுக்கு இது அதிசயமாக இருக்காது.’’ என்கிறார், முருகானந்தம்
period. end of sentence’ குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. இந்த உயரிய விருதுக்குக் காரணமானவர், கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம்.
கடந்த பல வருடங்களாகக் குறைந்த விலையில் பெண்களுக்கான நாப்கின்களைத் தயாரித்து வருபவர். இவரைப் பற்றிய ஆவணப் படங்கள் நிறைய வந்துள்ளன. பலராலும் அறியப்பட்ட அருணாசலம் முருகானந்தம் இடம்பெற்றுள்ள பீரியட். எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ என்ற ஆவணக் குறும்படம் தற்போது ஆஸ்கர் விருதினைப் பெற்றுள்ளது. 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைப்பெற்றது. சினிமா துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருது,`period. end of sentence’ படத்திற்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியில் உள்ளார், முருகானந்தம்.

என் வாழ்க்கை குறித்து கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும். மாதவிடாய் காலங்களில் பெண்கள் எந்தளவுக்கு அவதிப்படுகிறார்கள் என்பதை உணர, நானே நாப்கினை நாள் முழுவதும் அணிந்து பழகி அதன் பிறகு நாப்கின்கள் எப்படி இருக்க வேண்டும் எனத் தயாரித்து, அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களுக்குக் கொடுத்தேன். இப்படி நான் செய்வதைப் பார்த்து என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து சென்றார். சொந்த பந்தங்கள் யாரும் என் தொடர்பில் இருக்கத் தயங்கினார்கள். இப்படி என் வாழ்க்கையில் பல துக்க நாள்களைக் கடந்திருக்கிறேன். அதற்கெல்லாம் மருந்தாக, என்னைப் பற்றிய ஆவணப்படங்கள் மற்றும் விருதுகள் இன்னும் இந்தத் துறையில் சாதிக்க என்னை ஊக்கப்படுத்தியது.’’ என உரையாடலைத் தொடங்கினார், முருகானந்தம். இந்த ஆஸ்கர் விருது என்னைப் பொறுத்தவரை ஒரு எச்சரிக்கை மணி. அடுத்தடுத்த படங்களில் இன்னும் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்னும் சுமையை என் முதுகில் இறக்கி வைத்திருக்கிறது, இந்த ஆஸ்கர் விருது. கடந்த வருடம் பேட் மேன்’ (Pad man) படத்தை எடுத்த பிறகு இந்தப் படத்தை எடுத்தோம்.பேட் மேன்’ போன்ற படங்களில் மிக நுணுக்கமான, அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது. குடும்பத்தோடு பார்க்க முடியாது. பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகள் பற்றி தனியே ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்ற ஐடியா வந்தது. ஒரு குக்கிராமத்தில் உள்ள பெண்கள் நாப்கின் பற்றி தெரிந்துகொள்ள வீட்டுக்குத் தெரியாமல் எப்படி வருகிறார்கள். வீட்டுக்குத் தெரியாமல் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை எடுப்பதுதான் நோக்கமாக இருந்தது. அந்த வகையில், என்னைப் பற்றிய குறும்படத்தை எடுப்பதற்காகத்தான் `period. end of sentence’ இயக்குநர் Rayka Zehtabchi இந்தியா வந்திருந்தார். என்னைப் பற்றி நிறைய எடுத்தாயிற்று. பெண்களின் வலிகளைப் விவரிக்கும் படமாக எடுங்கள். என்னைப் பற்றி அதிகம் வேண்டாம் என்று சொன்னேன். இன்று`period. end of sentence’ சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது.’’ என்றவர், தொடர்ந்தார்.
ஆஸ்கர் வரை போகும் என்று நினைக்கவில்லை. சென்னை செயின்ட் ஜோஸப் பள்ளியில் வரும் மார்ச் 8-ம் தேதி காது கேளா, வாய்பேச முடியாத பெண்களுக்கென ஒரு நாப்கின் மிஷினை வைக்கிறேன். இதுதான் இந்தியாவிலேயே ஒரு சிறப்பு பள்ளியில் வைக்கப்படும் முதல் மிஷினாக இருக்கும். கஜா புயலின்போது மாதவிடாய் காரணமாக விஜயலட்சுமி என்பவரை தனியாக குடிசையில் வைத்திருந்ததால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இனி இன்னொரு விஜயலட்சுமி பாதிக்கப்பட கூடாது என்பதற்காகத்தான், காதுகேளாதோர் பள்ளியில் நாப்கின் மிஷின் வைக்கும் நிகழ்ச்சியை ‘விஜயலட்சுமி சென்டர்’ என்ற பெயரில் தொடங்குகிறோம். இனி தமிழ்நாடு முழுக்கவிஜயலட்சுமி நாப்கின் சென்டர்’ பரவும்.
இதைச் செய்த பின், இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், வெற்றி மாறன் போன்றவர்களிடம் இந்த விஷயத்தைச் சொல்வேன். அவர்கள் முடியாது எனும்போது, அமெரிக்காவில் இருக்கும் இயக்குநர்களுக்கு இதைத் தெரிவிப்பேன். இந்த விஷயத்தை அவர்கள் படமாக எடுப்பார்கள். அடுத்த விருது பெறப்போகும் படமாக எனது இந்த முயற்சி இருக்கலாம் என நினைக்கிறேன்.
இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால், இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருக்கும் பெண்களுக்கும் இந்த விஷயம் பொருந்தும். நான் முதன் முதலில் டாக்குமென்ட்ரி செய்தபோது இந்தியாவில் வெறும் 5% பெண்கள்தான் நாப்கின் பயன்படுத்துகிறார்கள் என்று டெல்லியில் பேசினேன். யாருமே நம்பவில்லை. பிறகு, கருத்துக்கணிப்பு எடுத்து 12% பெண்கள்தாம் நாப்கின் பயன்படுத்துகிறார்கள் என ஒப்புக்கொண்டார்கள். பெண்களிடம் இந்த விஷயம் குறித்துப் பேசுவது சுலபம். ஆண்களுக்குப் புரியவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இந்த விருதுகள் மூலம் இந்தப் பிரச்னை குறித்துப் பலரும் தெரிந்துகொள்வார்கள். என் 18 வருட உழைப்பினால், இப்போது 60% பெண்கள் நாப்கினைப் பயன்படுத்துகிறார்கள். 100% பெண்கள் நாப்கினைப் பயன்படுத்துதல் என்பதுதான், என் நோக்கம். அது படிப்படியாக நிறைவேறி வருகிறது. இந்த அங்கீகாரங்கள், விருதுகள் அனைத்தும் பெண்களுக்குத்தான் சென்றுசேரும்‘’ என்று முடிக்கிறார், அருணாசலம் முருகானந்தம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button