விமர்சனம்

பிராமணர் பார்பர் ஆகலாம் ! – ஆர்.ஜே. பாலாஜியின் “சிங்கப்பூர் சலூன்” விமர்சனம்

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், லால், மீனாட்சி சௌத்ரி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில், கோகுல் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “சிங்கப்பூர் சலூன்”.

கதைப்படி…  ஆர்.ஜே. பாலாஜி சிறுவயதில் பள்ளி நேரங்கள் தவிர மீதி நேரங்களில், லால் நடத்திவரும் சிங்கப்பூர் சலூன் கடையில் தனது நண்பருடன் நேரத்தை கழித்து வருகிறார். அந்த பகுதியில் சிகையலங்காரத்தில் லால் பிரபலமானவர் என்பதால் அவர் கடை எப்போதும் பரபரப்பாக இருக்கும். அவர் கத்திரியை கையாளும் விதமே தனித்துவமாக இருக்கும். ஆர்.ஜே. பாலாஜிக்கு சிறந்த சிகையலங்கார நிபுணர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் அப்போதே தோன்றுகிறது.

பின்னர் வளர்ந்ததும் அவரது பெற்றோர் பொறியியல் படிக்க வற்புறுத்தியதால் நான்கு ஆண்டுகள் கல்லூரி படிப்பை முடித்ததும், அவரது கல்லூரியிலேயே கேம்பஸ் இன்டர்வியூ வில் தேர்வாகிறார். ஆனால் தனது லட்சியம் சிறந்த சிகையலங்கார நிபுணர் ஆவதுதான் என வந்த வாய்ப்பை தவிர்த்து விடுகிறார். கல்லூரியில் காதலித்த பெண்ணும் சலூன் தொழிலை விரும்பாமல், வசதியுள்ள பையனை திருமணம் செய்ய இருப்பதாக கூறி ஆர்.ஜே. பாலாஜியை ஏமாற்றி விடுகிறார். எவ்வளவோ எதிர்ப்புகள் வந்தாலும், யார் வேண்டுமானாலும், எந்த வேலையையும் விருப்பப்பட்டு செய்தால் முன்னேறலாம் என்கிற எண்ணத்தோடு முயற்சியை கைவிடாமல் தன்னம்பிக்கையோடு இருக்கிறார்.

இதற்கிடையில் சத்தியராஜின் மகளை திருமணம் செய்கிறார். சத்யராஜ் சிக்கனமான மாமனாராக இருக்கிறார்.

ஆர்.ஜே. பாலாஜி சலூன் கடையை துவங்கி இந்தியாவிலேயே சிறந்த சிகையலங்கார நிபுணராக ஆனாரா ? அவரது கனவுகள் நிறைவேறியதா ? என்பது மீதிக்கதை…

ஆர்ஜே பாலாஜி ஒரிஜினல் பிராமணராக இருந்தாலும், பார்பர் கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருத்திப் போகிறார். பார்பராக ஆர்ஜேபாலாஜி நடித்திருக்கிறார் என்பதைவிட கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

சத்தியராஜ் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். ரோபோ சங்கர் காமெடி செய்ய முயற்சி செய்துள்ளார். படத்தில் லால் நடிப்பை பாராட்டியே ஆகவேண்டும். மற்ற நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அரவிந்த் சாமி, இயக்குநர் லோகேஷ்கனகராஜ், ஜீவா உள்ளிட்டோர் சிறப்புத் தோற்றத்தில் வந்து போகிறார்கள். ஆர்ஜே பாலாஜியை நம்பாமல் இத்தனை பேரையும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைத்தாரோ ஐசரி கணேஷ் என எண்ணத் தோன்றுகிறது. அதேபோல்தான் படமும் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது.

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை வெளியிட்டு வந்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது. முந்தைய படங்களைக் காட்டிலும், இந்தப் படம் போட்ட முதலீட்டையாவது வசூலிக்குமா என்றால் சந்தேகமே ! ஐசரி நைசாக ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுத்து தப்பித்துள்ளார். ஐசரியால் ஆர்ஜே பாலாஜிக்கு நேரம் சரியில்லையா ? ஆர்ஜே பாலாஜியால் ஐசரிக்கு நேரம் சரியில்லையா என்பதையும் இனிமேல் இருவரும் உணர்வார்கள்.

மொத்தத்தில் எந்த வேலையையும் முயற்சியை கைவிடாமல் விருப்பப்பட்டு செய்தால் முன்னேறலாம் என்கிற ஒற்றை வரி கதையை சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சித்துள்ளார் இயக்குநர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button