தமிழகம்

நீதிமன்ற உத்தரவை மீறி இரவோடு இரவாக ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கிய டிரஸ்ட் நிர்வாகி மீது வழக்குப் பதிவு

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஹோட்டலை காலி செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் ஆத்திரத்தில் இரவோடு இரவாக ஜேசிபி மூலம் ஹோட்டலை தரைமட்டமாக்கிய சம்பவத்தில் டிரஸ்ட் நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி காந்திஜி ரோடு பகுதியைச் சேர்ந்த வெங்கடராமன், பரமக்குடி அய்யாசாமி நந்தவனம் டிரஸ்ட்க்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டி 1978 ஆம் ஆண்டு முதல் நியூராஜா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை முறையாக வாடகை செலுத்தியுள்ளார். ஜனவரி மாதம் முதல் வாடகை பணத்தை வாங்க டிரஸ்ட் தரப்பினர் மறுத்துள்ளனர். இந்த நிலையில் ஹோட்டல் உரிமையாளர் வெங்கடராமன் பரமக்குடி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இந்தாண்டு ஜனவரி 29 ஆம் தேதி வரை ஹோட்டலை காலி செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹோட்டல் உரிமையாளர் வெங்கட்ராமனுக்கும், டிரஸ்ட் மேற்பார்வை நிர்வாகி பாலசுப்பிரமணியனுக்கும் வாடகை கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக ஹோட்டல் உரிமையாளர் வெங்கட்ராமன் வெளியூர் சென்றிருந்த நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் இரவோடு இரவாக ஜேசிபி உதவியுடன் ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். நீதிமன்ற உத்தரவால் ஆத்திரமடைந்து டிரஸ்ட் மேற்பார்வை நிர்வாகி பாலசுப்ரமணியன் 30 நபர்களுடன் ஜேசிபி உதவியுடன் ஹோட்டல் கட்டிடத்தை இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாயுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் நீதிமன் ஹோட்டலில் இருந்த இரும்பு பெட்டியில் சுமார் 200 சவரன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள், ரூபாய் 80 லட்சம் ரொக்க பணம், சமையல் பாத்திரங்கள், அடுப்புகள் என மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் உள்ளிட்டவையும் திருடு போயிருப்பதாகவும் ஹோட்டல் உரிமையாளர் வெங்கட்ராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பரமக்குடி அய்யாசாமி டிரஸ்ட் மேற்பார்வை நிர்வாகி பாலசுப்ரமணியன் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோட்டலை காலி செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால், ஆத்திரத்தில் ஹோட்டல் கட்டிடத்தை இரவோடு இரவாக தரைமட்டம் ஆக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button