அரசியல்தமிழகம்

இராமநாதபுரத்தில் காலியாகும் திமுக கூடாரம்..! : பாஜகவில் இணைந்த திமுக ஒன்றிய செயலாளர்கள்

இராமநாதபுரம் மாவட்ட திமுகவின் மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் செயல்பாடுகள் சரியில்லாததால் இராமநாதபுரம் மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளனர். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக தோல்வியடைந்ததை அடுத்து திமுக மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் மகன் சுப.த.திவாகரனை மாற்றி முத்துராமலிங்கத்தை மாவட்ட பொறுப்பாளராக நியமித்தது திமுக தலைமை.

முத்துராமலிங்கம் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்காமல் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் காலத்தில் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கத்தில் மட்டுமே செயல்படுவதாகவும், கட்சியை வளர்க்கும் ஆக்கப்பூர்வமான எந்தவித செயலிலும் ஈடுபடவில்லை எனவும் குற்றச்சாட்டுக்களை கூறுகிறார்கள் திமுக நிர்வாகிகள்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் நம்மிடம் கூறுகையில், மாவட்ட பொறுப்பாளராக முத்துராமலிங்கத்தை தலைமை நியமித்ததில் இருந்து தலைமைக்கு கட்டுப்பட்டு நாங்கள் கட்சிப்பணியாற்றி வருகிறோம். இவர் பதவிக்கு வந்தவுடன் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட தற்போது எம்.பி.யாக இருக்கும் நவாஸ்கனியிடம் தேர்தல் வேலை செய்வதற்காக பெரிய தொகையை பெற்றுக்கொண்டு செலவு செய்யாமல் தனது வீட்டிற்கு கொண்டு சென்று விட்டார். அதன்பிறகு கனிமொழி, உதயநிதி இருவரும் பிரச்சாரத்திற்கு வரும்போது கணிசமான தொகையை நவாஸ்கனி எம்.பி.யிடம் பெற்றுக்கொண்டு அந்தப் பணத்தையும் செலவு செய்யவில்லை. அந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் அதிமுக மீதுள்ள எதிர்ப்பு அலை காரணமாக திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஏதோ இவர் வேலை செய்துதான் இராமநாதபுரத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக தலைமையை ஏமாற்றி வருகிறார்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்ற இடங்களில் கூட ஆளும் அதிமுகவுடன் ரகசிய தொடர்பை வைத்துக் கொண்டு திமுக சேர்மன் பதவியை அதிமுகவுக்கு தாரை வார்த்தார். இவர் செய்யும் தவறுகளை தலைமைக்கு புகார் அனுப்பியும் தலைமை இவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏனோ? தெரியவில்லை. இவர் சொல்வதை கேட்காவிட்டால் கட்சி நிர்வாகிகள் மீது தலைமைக்கு தவறான தகவல்களை புகாராக கொடுத்து பழிவாங்கும் செயலை வாடிக்கையாக செய்துவருகிறார். இவரால் பழிவாங்கப்பட்ட ஒன்றிய செயலாளர்கள் போகலூர், கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்து விட்டார்கள். இதேநிலை நீடித்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டத்தில் திமுகவின் வெற்றி கேள்விக்குறிதான் என்று புலம்புகின்றனர்.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய செயலாளராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் இருக்கும் கதிரவன் சமீபத்தில் நூற்றுக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முருகன் தலைமையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய செயலாளராக இருந்த மதிவாணன், கடலாடி ஒன்றியச் செயலாளராக இருந்த ராஜசேகர் ஆகியோரும் தங்கள் ஆதரவாளர்களோடு பாஜகவில் இணைந்தனர்.

போகலூர் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் நம்மிடம் கூறுகையில்,
கடந்த முப்பது வருடங்களாக திமுகவிற்காக உழைத்தவன் நான். சமீபத்தில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முத்துராமலிங்கம் வந்ததில் இருந்து திமுகவை கட்சியாக நினைக்காமல் கார்பரேட் நிறுவனமாக நினைத்து கட்சிப் பதவிகளை வியாபாரம் செய்ய துவங்கி விட்டார். கடந்த தேர்தல்களில் எனது ஒன்றியத்தில் அதிமுகவை விட அதிக வாக்குகள் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன். எனது ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்கள் வெற்றி பெற வைத்திருக்கிறேன். ஒன்றிய தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்டபோது முப்பது வருடங்களாக கட்சிக்காகவே உழைத்த எனக்கு தலைவர் பதவி கிடைக்கவிடாமல் ஒரு கோடி ரூபாய்க்கு அந்தப் பதவியை விற்பனை செய்து விட்டார். இது சாம்பிள்தான். அனைத்து ஒன்றியங்களிலும் மாற்றுகட்சியினரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு திமுகவை தோற்கடித்துவிட்டார். இவரைப் போன்ற வியாபாரிகள் இருக்கும்வரை இந்த மாவட்டத்தில் திமுக வெற்றி பெறுவதே கடினம். இவரது பேச்சைக் கேட்டு தலைமையும் செயல்படுவதால் தான் மொத்த நிர்வாகிகளும் திமுகவை விட்டு வெளியேறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை கட்சிதான் எனக்கு துரோகம் செய்ததே தவிர நான் ஒருபோதும் கட்சிக்குத் துரோகம் செய்யவில்லை. திமுகவின் மாவட்ட பொறுப்பாளராக முத்துராமலிங்கம் வரும் தேர்தல்வரை இருந்தால் இப்போது நான் சார்ந்திருக்கும் பாஜக எளிதாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

2021 சட்டமன்ற தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெற உண்மையாக உழைப்பேன். இருக்கின்ற சில மாதங்களில் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் மாற்றுக் கட்சிகளில் இணைய இருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் திமுகவை காலி செய்த பெருமைக்குரியவர் என்ற பெயர் முத்துராமலிங்கத்தையே சேரும் என்று தனது உள்ளக்குமுறலை கொட்டித்தீர்த்தார்.

எது எப்படியோ தேர்தல் நெருங்கிவரும் இந்தச் சமயத்தில் திமுக நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் திமுகவை விட்டு வெளியேறி மாற்றுக் கட்சியில் இணைவது திமுகவிற்கு நல்லதல்ல. இந்த மாவட்டத்தின் உண்மை நிலையை விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்து அனைவருடனும் ஒத்துப் போகும் புதிய நிர்வாகிகயை நியமித்தால் மட்டுமே திமுகவிற்கு வெற்றி கிடைக்கும். அதன் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் இராமநாதபுரம் மாவட்ட திமுகவினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button