தமிழகம்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை, தலைமறைவான பேராசிரியரை தேடும் போலீசார்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் சாலையில் உள்ளது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே கல்லூரியில் தமிழ் துறை தலைவரான பாலமுருகன் மீது கவல்துறையினர் போக்ஸ்சோ வழக்கு பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் பாலமுருகன். கடந்த ஓராண்டிற்கு முன்பாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி பல்லடம் அரசு கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆன்லைன் மூலமாக பெறப்பட்ட புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நன்னடத்தை அலுவலர் கடந்த 28.07.2023 அன்று பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட தமிழ் துறை தலைவர் பாலமுருகன் தலைமறைவானதும் தெரிய வந்துள்ளது. கல்லூரியில் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பல்லடத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனிடையே தலைமறைவான பாலமுருகன் குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக ஊட்டி அரசு கலை கல்லூரியில் பேராசிரியராக பாலமுருகன் பணியாற்றிய போது தாவரவியல் துறையின் கெளரவ விரிவுரையாளராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் என்பவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதால் அதிர்ச்சி அடைந்து விரிவுரையாளர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே தான் செய்தது தவறு என ஒத்துக்கொண்ட பாலமுருகன் பின்னர் பாலகிருஷ்ணன் தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டியதாக பொய் புகாரை போலீசில் கொடுத்துள்ளதாகவும், அதன் பின்னர் நடந்த விசாரணையில் புகார் பொய்யானது எனவும் தெரிய வந்ததை அடுத்து போலீசார் பாலமுருகனை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் பல்லடம் அரசு கலை கல்லூரியில் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாலமுருகனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் பாலமுருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக தலைமறைவான பாலமுருகனை பிடிக்க தனிப்படை அமைக்க காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button