தமிழகம்

திருப்பூர் பனியன் தொழிலில் கல்லா கட்டும் கச்சா பில் கலாச்சாரம்..!

திருப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது பனியன். சர்வதேச அளவில் பனியன் தொழில் மூலமாக ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது.

மேலும் இத்தொழிலை நம்பி மறைமுகமாகவும், நேரடியாகவும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டுவருகின்றனர். ஏற்றுமதி தயாரிப்பு மற்றும் உள்நாட்டு பனியன் தயாரிப்பு என இரண்டு வகைப்படும். ஏற்றுமதி பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் தரக்கட்டுப்பாடுகளுக்கு ஏற்றவாறு தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் பனியன் பொருட்கள் மும்பை, தில்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. திருப்பூரில் இருந்து வட மாநிலத்திற்கு லாரி மூலமாகவும், ரயில் மூலமாகவும் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பின்னர் வரி கட்டுவதில் இருந்து தப்பிக்க வட மாநில வியாபாரிகள் தேர்ந்தெடுத்த முறைதான் கச்சா பில். லாரி மூலமாகவோ ரயில் மூலமாகவோ அனுப்பப்படும் பனியன் பண்டல்களை குறைத்து மதிப்பிட்டு பில் போட்டு வரி விதிப்பில் இருந்து தப்பிக்க வடமாநில வியாபாரிகள் தேர்ந்தெடுத்த வழி தான் கச்சா பில்.

உதாரணத்திற்கு வட மாநில வியாபாரி 50 பண்டல்களுக்கு ஆர்டர் செய்திருந்தால் 10 பண்டல்களுக்கு மட்டும் தான் பில் போடுவது வழக்கம். லோடு ஏற்ற ஆட்டோவில் கொண்டு செல்லும் வழியில் வழியில் வணிக வரித்துறை சோதனையில் பிடிபட்டால் பில்லை காண்பித்து தப்பித்துக்கொள்வார்கள். இல்லை எனில் 10 பண்டல்களுக்கு பில் போட்டுவிட்டு 50 பண்டல்களையும் லாரி ஆபிசிற்கோ அல்லது ரயில்வே பார்சல் புக்கிங் ஆபிசிற்கோ கொண்டு சென்று சேர்த்துவிடுவர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பூர் ரயில் நிலையத்தின் பார்சல் பிரிவில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட ஈரோடு வணிகவரித்துறை பறக்கும் படை அதிகாரிகள் கச்சா பில் முறையில் முறைகேடாக பில் போடப்பட்ட 50 பனியன் பண்டல்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். உள்நாட்டு உற்பத்தி தொழிலை நம்பி சுமார் 6000 நிறுவங்கள் செயல்பட்டு வரும் நிலையில் ஜிஎஸ்டி வரி கட்டி விற்பனை மேற்கொள்வதில் எந்த வித சிக்கலும் இல்லை. வட மாநில வியாபாரிகளின் வற்புறுத்தல் காரணமாக கச்சா பில் தயாரித்து அனுப்பப்படுகிறது. வழித்தடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத பட்சத்தில் சரக்குகள் கைக்கு வந்தவுடன் பில்லை கிழித்துவிடுகின்றனர். இந்த கச்சா பில் மோசடியில் வட மாநில வியாபாரிகள் லாபமடைகின்றனர். முக்கியமாக வட மாநில சிறு வியாபாரிகள் தான் இது போன்று முறைகேட்டில் ஈடுபட்டு லாபம் அடைகின்றனர்.

திருப்பூரில் காங்கேயம் சாலையில் வெங்கடேச்க்ஷ்வரா நகர் பகுதியில் இது போன்ற கச்சா பில் மோசடியில் ஈடுபடும் உள்நாட்டு நிறுவனங்கள் செயல்பட்டுவருவதாக கூறப்ப்டுகிறது. மேலும் வணிக வரித்துறை சோதனையில் பண்டல்கள் பிடிபடாமல் இருக்க ஒரு கும்பல் இரு சக்கர வாகனத்தில் வேவு பார்த்து விட்டு பின்னர் ஆட்டோ மூலமாக சரக்குகளை கொண்டு சென்று லாரி அலுவலகங்களில் சேர்க்கின்றனர்.

மேலும் பங்களாதேஷில் பனியன் உற்பத்தி செலவு மிகவும் குறைவு, இதனால் விற்பனையாளர்கள் பங்களாதேஷிற்கு வர்த்தகத்தை கொண்டு செல்ல வாய்ப்புள்ளதால் வட மாநில வியாபாரிகள் கொடுக்கும் அழுத்தம் தான் கச்சா பில் தயாரித்து பனியன் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இந்த மோசடி விவகாரத்தில் வேவு பார்ப்பதற்கு PRESS STICKER ஒட்டிய கார்கள் நகரில் உலா வருவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிக வரித்துறை அதிகாரிகள் ரயில் நிலையம், லாரி அலுவலகத்தில் தொடர் சோதனை நடத்தினால் முறைகேடுகளை தடுத்து நிறுத்த முடியும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button