இலவசமாக பொதுமக்களுக்கு பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்கள் : நூதனமுறையில் போராட்டம்!
தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பசும்பால் லிட்டருக்கு 35 ரூபாயிலிருந்து 42 ரூபாயும், எருமைப்பால் லிட்டருக்கு 44 ரூபாயிலிருந்து 51 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் பால் உற்பத்தியாளர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக பால் ஊற்றி தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். கறவை மாடுகளுடன் வருகை தந்து பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கியும், கூட்டுறவு சங்கம் முன்பாக பால் கேன்களுடன் பால் உற்பத்தியாளர்கள் காத்திருந்து பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கினர்.
இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறும்போது, “சேலம் மாவட்டத்தில் 810 பால் கூட்டுறவு சங்கங்களில் 20,000-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினராக உள்ளனர். பால் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக சேலம் மாவட்டத்தில் மொத்தமாக 4.50 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாளர்களால் வழங்கப்படுகிறது. இதில், பால் உற்பத்தியாளர்களுக்கு எந்தவித லாபமும் இல்லை. எங்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கிச்சென்று, பலமடங்கு விலை வைத்து பால் விற்கின்றனர். தற்போது அத்தியாவசிய விலைகள் அனைத்தும் உயர்ந்துவிட்ட நிலையில் பால் விலை மட்டும் உயராமல் உள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஆவின் பொதுமேலாளர் கூறுகையில், “சேலம் மாவட்டத்தில் உள்ள 809 பால் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக முழுமையாக ஆவினுக்கு பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். பாகல்பட்டி பகுதியில் மட்டும் அந்த பாகல்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் பெரியண்ணன், உற்பத்தியாளர்களை ஊற்ற விடாமல் பேசி திருப்பி அனுப்பி வைத்து வருகிறார். இது கூட்டுறவு சங்க விதிமுறைக்கு முரணானது. தலைவர் பதவியில் இருந்து ஏன் நீக்க கூடாது என்று ஆவின் துணைப்பதிவாளர் கேள்வி கேட்டு அறிக்கை வழங்க உள்ளோம்” என தெரிவித்தார்.