மழைநீர் சேமிப்புக்கு முன்னுதாரணம் : அசத்தும் கிராமத்து இளைஞர்கள்…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீடுகள், தெருக்களில் இருந்து வெளியேறும் மழைநீரை பாழடைந்த கிணற்றில் சேமித்து, அப்பகுதி நிலத்தடி நீர் உயர்வுக்கு வழிவகுத்து இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.
குடியாத்தம் அருகேயுள்ள கொல்லகுப்பம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தின் குடிநீர் தேவைக்கு என 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டதில் இரண்டில் மட்டுமே சொற்ப அளவில் தண்ணீர் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆழ்துளைக் கிணறுகளும் கோடை கால கொடும் வெப்பத்தில் முழுவதுமாக வறண்டு, தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்துள்ளனர். அங்குள்ள தனியார் விவசாயக் கிணற்றில் இருந்து தங்களது தண்ணீர் தேவையை அவர்கள் பூர்த்தி செய்து வந்துள்ளனர்.
கொடுமையான அந்த தண்ணீர் பஞ்சம் குறித்து ஆராய்ந்த அந்த ஊர் இளைஞர்கள், மழைநீர் சேமிப்பில் கவனம் செலுத்தாமல் போனதே அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தனர். இதனையடுத்து மழைக்காலத்தில் வரும் நீரை சேமிக்க முடிவெடுத்த அவர்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாழடைந்து, பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கிணற்றில் மழை நீரை சேமிக்க முடிவெடுத்தனர்.
ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு தெருக்களில் வாய்க்காலை ஏற்படுத்தினர். அந்த வாய்க்காலை கிணறு வரை நீட்டித்த இளைஞர்கள், அங்கு பள்ளம் ஒன்றைத் தோண்டி, கற்களை நிரப்பினர். அதிலிருந்து பிவிசி குழாய் ஒன்று கிணற்றுக்குள் செல்லுமாறு வடிவமைத்தனர்.
கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், தெருக்களில் பெருக்கெடுக்கும் நீர் வாய்க்கால் வழியாக வந்து பிவிசி குழாய் மூலம் கிணற்றுக்குள் நிரம்புகிறது. இடையில் போடப்பட்டிருக்கும் கற்கள் தேவையற்ற மண் மற்றும் குப்பைகளை வடிகட்டிவிடுகிறது. இந்த வகையில் மழை நீரை சேமிக்கத் தொடங்கியதில் இருந்து அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக அவ்வூர் இளைஞர்கள் கூறுகின்றனர்.
அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அரசு சார்பிலும் பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கொல்லகுப்பம் இளைஞர்களின் வெற்றிகரமான இந்த முயற்சியை அனைத்து கிராமங்கள், நகரங்களில் உள்ளவர்களும் பின்பற்றினால், கோடை கால தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து நிச்சயம் விடுபடலாம்.