பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு !

தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,480 கிராம ஊராட்சிகளில் இன்று சனிக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஆறு முறை கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். குடியரசு தினமான ஜனவரி 26 மற்றும் மார்ச் 22 தொழிலாளர் தினமான மே ஒன்று, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில், 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதனிடையே பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வணக்கம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் சென்னிமலை பாளையம் அருகே உள்ள கணபதி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கூட்டத்தில் கலந்து கொண்டு. தங்களுக்கு உண்டான பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர், கடந்த 26.08.2025 தேதியிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆட்சேபனை கடிதம் ஒன்றை பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அளித்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அல்லாளபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு உலகேஸ்வர ஸ்வாமி (ம) வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 104 சர்வே எண்களின் 625. 60 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், மேற்படி நிலத்தின் மீது எந்த பத்திரப்பதிவு மேற்கொள்ளக்கூடாது என்று கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

மேற்படி இடத்தில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் முறையாக நகர ஊரமைப்பு சார்பில் மனை வரன்முறைப்படுத்தப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு அதில் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் வீடுகள் கட்டுவதற்கு பல்வேறு அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் லட்சக்கணக்கில் கடன் பெற்று தற்போது தவணை கட்டி வருகின்றனர். மேற்படி இந்து சமய அறநிலைத்துறையின் அறிவிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். தாங்கள் வாங்கிய நிலத்திற்கு முறையாக பதிவு செய்துள்ளதாகவும், தாங்கள் வாங்கும் போது எந்த ஒரு வில்லங்கமும், வில்லங்கச் சான்றில் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து இந்து சமயம் அறநிலையத்துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அதிகாரியை கிராமசப கூட்டத்திற்கு அழைத்ததாகவும், கூட்டம் முடியும் வரை வருவதாக ஒப்புக்கொண்டு பின்னர் வராததால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் கிராம சபா கூட்டத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் புறக்கணித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம சபா கூட்டம் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



