விவசாயிகள் & கல்குவாரி உரிமையாளர்கள்.! தீவிரமடையும் போராட்டங்கள்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்கு உட்பட்ட கோடங்கி பாளையம் மற்றும் இச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 30 திற்க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலை நம்பி சுமார் 3000 குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் வடமாநிலத்தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர். இந்நிலையில். இச்சிப்பட்டியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் தனது விளை நிலத்திற்கு அருகே இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியால் விவசாயம் மற்றும் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதாக கனிமவளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பல முறை புகார் மனு அளித்துள்ளார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தனது மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஜயகுமார் தனது தோட்டத்து வீட்டில் தனிநபராக உண்ணாவிரதத்தை துவங்கினார்.
விஜயகுமாரின் உண்ணாவிரதத்திற்கு ஈசன் முருகசாமி தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆதரவு அளிக்கப்பட்டதை அடுத்து கல்குவாரிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில் கல்குவாரி உரிமையாளர் சங்கம் சார்பில் தொழிலை முடக்கும் விதமாக விவசாயிகள் போர்வையில் ஈசன் முருகசாமி பணம் கேட்டு மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அனு அளித்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் கல்குவாரியை தற்காலிகமாக இயங்க தடை விதித்து உத்தரவிட்டது.
இதனை அடுத்து 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த விஜயகுமார் போராட்டத்தை முடித்துக்கொண்டார். இந்நிலையில் கோடங்கிபாளையம் பகுதியில் இயங்கி வரும் மற்றொரு கல்குவாரி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக செந்தில்குமார் என்பவர் அவரது வீட்டின் முன்பாக தனி நபராக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மேற்படி செந்தில்குமாரின் வீட்டின் அருகே இயங்கிவரும் கல்குவாரியை ஆய்வு செய்த கனிமவளத்துறையினரும் வருவாய்துறையினரும் அறிக்கை தயாரித்து வருகின்றனர்.
இதனிடையே கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இரண்டு நாள் போராட்ட அறிவிப்பு வெளியானது. முதல்நாளான இன்று குவாரிகளை மூடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சுமார் 2500 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இபோராட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் கூறும்போது தங்களது வாழ்வாதரத்தை பாதிக்கும் விதமாக உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டுவரும் செந்தில்குமார் வீட்டின் முன்பாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் குறைதீர் முகாமில் புகார் மனு அளித்த தமிழக விவசாய பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி, கல்குவாரிக்கு எதிரான தங்களது போராடத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பணம் கேட்டு மிரட்டுவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கல்குவாரி உரிமையாளர்கள் பரப்பி வருவதாகவும், விதிமுறைகளை மீறி இயங்கிவரும் கல்குவாரிகளை மூடும் வரை போராட்டம் நடத்தப்போவதாகவும், போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில கல்குவாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சின்னசாமி கூறுகையில் கல்குவாரி தொழிலை முற்றிலும் அழிக்கும் விதமாக விவசாயிகள் போர்வையில் போலி சங்கத்தை சேர்ந்தவர்கள் சுயநலத்திற்காக போராட்டம் நடத்தி கல்குவாரி தொழிலை அழிக்க நினைப்பதாகவும், 2013 ஆம் ஆண்டிற்கு முன்பாக துவங்கப்பட்ட கல்குவாரிகளுக்கு தற்போதைய விதிமுறைகள் பொருந்தாது எனவும், கல்குவாரி தொழிலால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என தெரிவித்தார். மேலும் சின்னசாமி பேசுகையில் தமிழ்நாடு முழுவதும் இது போன்று தங்களது தொழிலை முடக்கும் விதமாக செயல்படும் சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்து கல்குவாரி தொழிலை மீட்டெடுக்க தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறுவதாகவும், நாளை 13.09.2022 அன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் காரணம் பேட்டையில் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் மறைமுகமாக இத்தொழிலை நம்பியுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்தார். விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் கோடங்கிப்பாளையம் பகுதியே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.
அரசு தீவிர நடவடிக்கை எடுத்து விவசாயத்தை பாதுகாப்பதோடு கல்குவாரி தொழிலை கண்காணிக்க தீவிர கண்காணிப்பு குழு அமைத்து இது போன்று பாதிப்புக்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும், மனிதன் உயிர் வாழ விவசாயம் எவ்வளவு முக்கியமோ அதே போல் இருப்பிடம் கட்ட கட்டுமானத்துறைக்கு கல்குவாரி முக்கியம் எனவே இரு கண்காளாக உள்ள விவசாயத்தையும் கல்குவாரி தொழிலும் பாதிக்கபடாமல் எதிர்காலத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.