தமிழகம்

முகநூல் – இன்ஸ்டாவில் பெண்களின் புகைப்படம் எடுத்து மார்பிங் செய்யும் கும்பல்..!

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் திருமணமான பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை திருடி ஆபாசமாக மார்பிங் செய்து, கணவரை மிரட்டி பணம் பறித்து வந்த கல்லூரி மாணவன் உள்ளிட்ட இருவரை ராமநாதபுரம் எஸ்.பியின் தனிப்படை அதிரடியாக கைது செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தனிப்பிரிவு ஒன்றை வைத்துள்ளார். அதன்மூலம் பல முக்கிய வழக்குகளை விரைவாக துப்புத் துலக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் பரமக்குடியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரின் புகைப்படத்தை அவரது முகநூலில் இருந்து திருடிய மர்ம ஆசாமி ஒருவன், அதனை ஆபாசப் படமாக மார்பிங் செய்து, கணவனுக்கு அனுப்பி 20 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளான். இது குறித்து தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பணம் தருவதாகக் கூறி பணம் கேட்ட நபரை போலீசார் பொறிவைத்து வரவழைத்துப் பிடித்தனர்.

விசாரணையில் மிரட்டல் விடுத்தவன், தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் பரமக்குடி உலக நாதபுரம் பகுதியை சேர்ந்த ரோஹித் என்பது தெரியவந்தது. முகநூலில் குடும்ப பெண்களின் படங்களைத் தேடி எடுத்து அவற்றை மார்ஃபிங் செய்து பணம் பறித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே போல சென்னை புதுப்பாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் இன்ஸ்டாகிராமில் இருந்து அவரது புகைப்படத்தை திருடி, ஆபாசமாக மார்ஃபிங் செய்து அவரது கணவருக்கு படத்தை அனுப்பி, தனது வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் பணம் செலுத்தச் சொல்லி மிரட்டியுள்ளான்.

பணம் செலுத்த மறுத்தால் சமூக வலைதளங்களில் மனைவியின் ஆபாச படத்தை வெளியிடப் போவதாக பிளாக்மெயில் செய்துள்ளான். வங்கிக் கணக்கு எண்ணை வைத்து, அது ராமநாதபுரம் மாவட்டம் என்பதை கண்டறிந்து எஸ்.பி வருண்குமாரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

வங்கிக் கணக்கை வைத்து துப்புத் துலக்கிய போலீசார், சுகன்யா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த உச்சிப்புளியை சேர்ந்த சிவக்குமார் என்பவரை அதிரடியாக கைது செய்தனர். சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் தற்போது அதிகளவில் நடப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடும்பப் பெண்கள் தங்கள் செல்ஃபி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவதை கூடுமானவரை தவிர்ப்பதே நலம் என்றும், இல்லையெனில் வில்லங்கம் எப்போது வேண்டுமானாலும் வீடுதேடி வரலாம் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

சேலத்தில் பெண்களை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் மூவரையும் விசாரித்த காவலர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தாதகாபட்டியைச் சேர்ந்த ஒருவர் அதே பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது அழகு நிலையத்தில் பணிபுரியும் 2 பெண்கள், உரிமையாளர் அவரது மனைவியுடன் சேர்ந்து தங்களை மிரட்டி செல்போனில் ஆபாச புகைப் படம் எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிப்பதாக போலீசில் புகாரளித்தனர். அதன் பேரில் அந்த நபர், அவனுடைய நண்பர்கள் பிரதீப், சிவா ஆகியோரை மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

மூவரின் செல்போன்களில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருப்பதும் தெரியவந்தது. அவர்களை சிறையில் அடைப்பதற்காக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் அழகு நிலைய உரிமையாளருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து, மூவரையும் விசாரணை செய்த மகளிர் காவல்நிலைய காவலர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

  • வேல்மணி, தி.கார்த்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button