பிரபல பத்திரிகையாளர் கொலை வழக்கை, தொடராக தயாரிக்கும் “சோனி லிவ்” ஓடிடி
ஓடிடி தளமான “சோனி லிவ்” தனது புதிய தமிழ் வெப் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், “THE MADRAS MURDER” (தி மெட்ராஸ் மர்டர்) என தலைப்பிடப்பட்டுள்ள வெப் தொடரினை சூரியபிரதாப்.S, எழுதி-இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பாக I.B.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குனர் A.L.விஜய் ஷோ ரன்னராக SHOWRUNNER-ஆக செயல்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வெப் தொடர் 1940-களில் மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த ஒரு பிரபல கொலை வழக்கினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இந்த வெப் தொடரில் நடிக்கவிருக்கும் நடிகர்-நடிகையர்கள் மற்றும் இதில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வெப் தொடர், உண்மைச் சம்பவங்களை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதன்படி கொல்லப்பட்ட அந்த நபர் 1940-களில் பிரபலமான ஒரு பத்திரிக்கையாளர் என்றும், அந்த கொலை வழக்கில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 1944-ஆம் ஆண்டு மெட்ராஸ் புரசைவாக்கத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யபட்ட பிரபல மஞ்சள் பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தனின் கொலை வழக்கு மற்றும் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை சென்ற தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் தொடர்பு பற்றிய கதையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இன்று வரை லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பல அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள் இருக்கிறன. மேலும், லட்சுமிகாந்தனை கொலை செய்தது யார் என்பது இன்று வரை விடை தெரியாத புதிராகவே உள்ளது. இந்த வெப் தொடர் அந்த புதிர்களுக்கும், மர்மங்களுக்கும் விடை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த வெப் தொடருக்கான முன்தயாரிப்பு பணிகள் முடிவடைந்து,விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.