“பொய்க்கால் குதிரை”படத்தின் கதை ரசிகர்களுக்கு புரியுமா? பிரபுதேவாவுக்கு சந்தேகம்
டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விழா, பத்திரிகையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
நடிகர் பிரபு தேவா பேசுகையில்… இந்தப் படத்தில் ஒற்றைக்காலுடன் நடனமாட வேண்டியதிருந்தது. சதீஷ் இதனை நன்றாக வடிவமைத்திருந்தார். அவருடைய உதவியாளர்கள் நன்கு பயிற்சி எடுத்து, என்னை விட நன்றாக ஆடினார்கள். நாங்கள் ஏழு மாதத்திற்கு ஒரு முறை பாடல் காட்சியில் வரும்போது நடனமாடுகிறோம். மிகவும் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து நடனமாடியிருக்கிறேன். நடன இயக்குநரின் கனவை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.
சில படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கும். ஆனால் பொய்க்கால் குதிரை படத்தில் படத்தொகுப்பு சிறப்பாக இருக்கும். ஏனெனில் நான் கதையை கேட்கும்போதே, ‘இந்த கதை ரசிகர்களுக்கு புரியுமா?’ என்று தான் இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு படத்தொகுப்பாளர் மற்றும் இயக்குநர் இணைந்து மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் படத்தொகுப்பு பாணி வித்தியாசமாக இருக்கும். இதற்காக படத்தொகுப்பாளர் ப்ரீத்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
நடிகை வரலட்சுமி அழகான பெண் மட்டுமல்ல. திறமையான நடிகையும் கூட. சிலர் திரையில் நடிக்கும் போது தான் அவரது திறமை வெளிபடும். ஆனால் நடிகை வரலட்சுமி திரையில் தோன்றினால் போதும். ரசிகர்களை கவர்ந்து விடுவார்.
தயாரிப்பாளர் வினோத்குமார், தீவிரமான செயல்பாடு உடையவர். இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி எப்படி உத்வேகத்துடன் செயல்படுவாரோ.. அதேபோல் பட குழுவில் அவருடைய செயல்பாடு இருக்கும். இது போன்ற வேகமாகச் செயல்படும் தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் திரையுலகிற்கு தேவை. அவர் சொல்வதை நிறைவேற்றுவார்.
இயக்குநர் சந்தோஷ் குமார் இதற்கு முன்னர் வேறு மாதிரியான படங்களை இயக்கியிருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை. சந்தோஷ் என்னிடம் சொன்ன கதை பிடித்திருந்தது. சொன்ன விதமும் பிடித்திருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு இயக்குநருக்கு தேவையான ஆளுமை திறன் அவரிடம் இருந்தது. விரைவாகவும், திட்டமிட்ட படியும் படப்பிடிப்பை நடத்தினார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளர்களின் இயக்குநராக இருந்தார். என்னிடமிருந்து நல்லதொரு நடிப்பை வெளிக் கொணர்ந்தார். ‘பொய்க்கால் குதிரை’ நல்லதொரு திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, ரசித்து, ஆதரவு தர வேண்டும்.” என்றார்.