பெண்களின் ரோல்மாடலா..! சாய் பல்லவி. “கார்கி” விமர்சனம்
தமிழ் திரையுலகில் கடந்த மூன்று நாட்களாக அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார் சாய் பல்லவி. இவரது நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள படம் “கார்கி”. இந்தப் படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார்.
நடுத்தர குடும்பம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து, தந்தை ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் காவலராகவும், தாய் வீட்டில் மாவு விற்பனை செய்தும், மகள் தனியார் பள்ளி ஆசிரியராகவும் வேலை பார்த்து குடும்பம் நடத்துகின்றனர். இந்நிலையில் அடுக்கு மாடி குடியிருப்பில் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் செய்ததாக நான்கு வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், ஐந்தாவது குற்றவாளியாக அடுக்கு மாடி குடியிருப்பின் காவலாளி ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகிறது. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
கார்கி தனது தந்தையைத் தேடி அவர் வேலை பார்க்கும் அடுக்கு மாடி குடியுருப்புக்கு சென்று விசாரிக்கும் போது, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. தன்னந்தனியாக இரவு நேரத்தில் காவல்நிலையத்தில் தனது தந்தையை பார்க்க வேண்டும் என போராடுகிறார்.
இதற்கிடையில் மீடியா இவரை துரத்துகிறது. அப்போது நீங்கள் நினைத்ததை சொல்வது செய்திகள் அல்ல, நடந்ததை சொல்வது தான் செய்தி, தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என கடந்து செல்லும் போது, தந்தையின் மீது மகள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பார் இயக்குனர்.
இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என பார் கவுன்சில் தடை விதித்துள்ள போதும், காளி வெங்கட் ஆஜராகிறார். இந்த வழக்கில் யார் உண்மையான குற்றவாளி, தனது தந்தையை நிரபராதி என நிரூபித்து வெளியே கொண்டுவர போராடும் கார்கி வெற்றி பெற்றாரா என்பது மீதிக்கதை.
நீதிமன்றத்தில் நீதிபதியாக நடித்துள்ள மூன்றாம் பாலினத்தவர் பேசும் வசனங்களும், நடிப்பும் அற்புதம்.
நீதிமன்றத்தில் படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்தும் புதுமையாகவும், எதிர்பார்ப்பு நிறைந்ததுமாக இருந்தது. பாலியல் சித்ரவதைக்கு உள்ளான சிறுமியின் தந்தையாக சரவணன் ஒரு தந்தையின் மனநிலையை அற்புதமாக தனது நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில் சாய் பல்லவி “கார்கி” யாக இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கிறார். தனது இளமைக் காலத்தில் ஆசிரியரின் தவறான தொடுத்தால் பாதிக்கப் பட்ட கார்கி, இந்த செய்தியை கேட்ட பிறகு தனது தங்கையை கண்டிப்புடன் வளர்க்கும் பொறுப்புள்ள அக்காவாக நடித்திருக்கிறார். பாலியல் குற்றவாளிகளால் ஏற்படும் சமுதாய சீரழிவை அப்பட்டமாக சொல்லியதோடு, தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
இந்தப் படத்தின் மூலம் சாய் பல்லவி லேடி சூப்பர் ஸ்டாராகவும், பெண்களின் ரோல் மாடலாகவும் திகழும் அளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.