மனுதர்மம் பேசி, மாய சாகச பயணத்திற்கு அழைத்துச் செல்லும் “கார்த்திகேயா-2”
பீப்பிள் மீடியா பேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் “கார்த்திகேயா-2” திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாக இருக்கிறது. இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு ஐந்து மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகிறது.
கார்த்திகேயா முதல் பாகத்தை விட இரண்டாம் பாகமான “கார்த்திகேயா-2” சிறப்பாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது “நீதி நம்மை பாதுகாக்கிறது, கறை படிந்த கைகளால் நீதி பாதுகாக்கப்பட கூடாது, நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற மனுஸ்மிருதியின் அடிப்படையில் கதை நகர்கிறதாம். சிறந்த கதையம்சத்துடன், பொழுதுபோக்கு நிறைந்த, பிரமாண்டமான காட்சியமைப்புகளுடன், அதிக உணர்ச்சிகள் கொண்ட புது வகையான திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் இயக்குனர்.
இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் டி.ஜி.விஷ்வ பிரசாத் கூறுகையில்… கார்த்திகேயா என்ற கதாப்பாத்திரம் பலவிதமான புராண, வரலாற்று கதைகளை விரிவாக ஆராயும் திறனைக் கொண்டுள்ளது. இயக்குனர் சாண்டு மெண்டோடியின் திரைக்கதை பழங்கால வரலாறு பற்றிய ஆழமான அறிவைக் கொண்டிருப்பதால், எந்தவித தயக்கமும் இன்றி அவரது இந்த காவிய சாகசத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன், நாங்களும் இப்படைப்பினை முன்னோக்கி கொண்டு செல்ல முடிவெடுத்தோம் என்றார்.
தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் கூறுகையில்… இந்தப் படம் எங்களது லட்சியப் படங்களில் ஒன்று. இயக்குனர் கதையை விவரித்த போதே நாங்கள் இப்படத்தை கண்டிப்பாக தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தோம். இந்தப் படம் தர்மத்தை கொண்டாடுவதோடு, படம் பார்ப்பவர்களை ஒரு மாய சாகச பயணத்திற்கு அழைத்துச் செல்லும் படமாக இருக்கும் என்றார்.
இப்படத்தை சாண்டு மெண்டோடி எழுதி, இயக்கியிருக்கிறார். டி.ஜி. விஸ்வ பிரசாத், அபிஷேக் அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், ஶ்ரீனிவாஸ் ரெட்டி, விவா ஹர்ஷா, ஆதித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.